நாளை மறுநாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசு நாளை புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை வருகிற வியாழன் அன்று (31.10.2024) அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் சூழலில் தமிழக அரசு ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று பொதுவிடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் சனி, ஞாயிறு விடுமுறை என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்ததால் உற்சாகமானார்கள். பலரும் சொந்த ஊருக்குப் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளை அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் முதல் நாள் புதன் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடைகளில் சென்று ஷாப்பிங் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும் எனவும் விரும்பினர். இதுமட்டுமல்லாது நள்ளிரவில் குழந்தைகளுடன் பேருந்துகளில் பயணித்து சொந்த ஊர் திரும்புவது மிகுந்த சிரமமாக இருக்கிறது எனவும் தெரிவித்தனர்.
இதனால் தமிழக அரசு நாளை புதன் கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறையை அளித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூழலில் சொந்த ஊருக்குச் செல்வோர் முன்கூட்டியே கிளம்பி இரவு நேரங்களில் பயணிக்காமல் பகலிலேயே பயணிக்கலாம். மேலும் பல்வேறு பகுதிகளில் பருவ மழையும் பெய்து வருவதால் விரைவாகவே ஷாப்பிங் செய்து மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடலாம்.