ஈரான் ட்ரோன்களை எப்படி அழிக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நாங்கள் உதவட்டுமா? ஆனால் அதுக்கு பதிலா நீங்க ஒன்னும் எனக்காக செய்யனும்.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆஃபர் கொடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. யுத்தம் செஞ்சு ஜெயிக்கிறது ஒரு வகை… ஆனா எதிரியோட நண்பனையே சமாதானம் பேச வைக்கிறது வேற லெவல் ராஜதந்திரம். ஜெலென்ஸ்கி இப்போ அந்த ரூட்ல தான் போறாரு!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போரை மையமாக வைத்து ஒரு அதிரடியான மற்றும் வியக்கத்தக்க ராஜதந்திர முன்மொழிவை வழங்கியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷியாவின் முழு…

ukraine president

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போரை மையமாக வைத்து ஒரு அதிரடியான மற்றும் வியக்கத்தக்க ராஜதந்திர முன்மொழிவை வழங்கியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷியாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வரும் உக்ரைன், ஈரானிய தயாரிப்பு ‘ஷாஹெட்’ ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதில் உலகிலேயே மிகச்சிறந்த அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் தனது போர் நிபுணர்களை அங்கு அனுப்பி உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ஆனால், இந்த உதவிக்கு கைமாறாக ஒரு முக்கிய நிபந்தனையை அவர் விதித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டு தலைவர்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, அந்த செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் போரில் குறைந்தது ஒரு மாத காலத்திற்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல்படுத்த புதினை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய கிழக்கு தலைவர்கள் ரஷியர்களிடம் பேசி இந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால், உக்ரைன் தனது சிறந்த ட்ரோன் எதிர்ப்பு வல்லுநர்களை அந்த நாடுகளுக்கு அனுப்பி பொதுமக்களை பாதுகாக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த போர்நிறுத்தக் காலம் இரண்டு வாரங்களாகவோ அல்லது இரண்டு மாதங்களாகவோ கூட இருக்கலாம் என்பது அவர் முன்வைக்கும் திட்டம்.

ஈரானின் உச்ச தலைவர் கமேனி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த வார இறுதியில் துபாய் உள்ளிட்ட முக்கிய மத்திய கிழக்கு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் மழையை தொடர்ந்து ஜெலென்ஸ்கியின் இந்த முன்மொழிவு வந்துள்ளது. ஈரானிய ட்ரோன்கள் உக்ரைன் நகரங்களை தாக்கும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த தனித்துவமான உத்திகளை உக்ரைன் வீரர்கள் நன்கு அறிந்துள்ளனர். இந்த நிபுணத்துவத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த முடியும் என உக்ரைன் நம்புகிறது.

இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த கோரிக்கைகளை ரஷியா ஏற்கனவே பலமுறை நிராகரித்துள்ளது. தற்போது போர்க்களத்தில் சாதகமான நிலையில் இருக்கும் புதின், மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று உக்ரைனில் போரை நிறுத்துவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ரஷிய தரப்பிலிருந்து இதற்கு இதுவரை சாதகமான சமிக்ஞைகள் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், ரஷிய அதிபர் புதின் ஈரானிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பஹ்ரைன், அமீரகம் மற்றும் கத்தார் நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து உரையாடி வருகிறார். ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், மாஸ்கோ ஈரானிய தலைமையுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், பிராந்திய அமைதிக்காக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் ரஷியாவுடன் வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ளதால், அவர்கள் மூலமாக அழுத்தம் கொடுப்பதே தற்போதைய சூழலில் சாத்தியமான ஒரே வழி என்று ஜெலென்ஸ்கி கருதுகிறார்.

இறுதியாக, இந்த உதவி மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இஸ்ரேலுக்கும் பொருந்தும் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனின் இந்த நகர்வு, போரினால் நிலைகுலைந்துள்ள தனது நாட்டுக்கு சிறிய இடைவெளியை பெற்று தருவதோடு, சர்வதேச அளவில் தனது ராணுவ தொழில்நுட்பத்தின் மதிப்பை உயர்த்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. ஈரான், ரஷியா ஆகிய இரு நாடுகளுமே தங்களுக்கு பொதுவான எதிரியாக இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளுடன் கைகோர்ப்பது உக்ரைனுக்கு புதிய நட்பு வட்டத்தை உருவாக்கும். ஆனால், புதினின் பிடிவாதமும் ஈரானின் ஆக்ரோஷமும் இந்த ராஜதந்திர முயற்சியை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.