200 ஊழியர்களை திடீரென வீட்டுக்கு அனுப்பும் உபெர்.. தொடரும் வேலைநீக்கத்தால் அதிர்ச்சி..!

Published:

கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல்வேறு பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கூகுள் முதல் மைக்ரோசாப்ட் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியுள்ள நிலையில் தற்போது உபெர் நிறுவனம் 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பணி நீக்க நடவடிக்கை செலவினங்களை குறைப்பதற்காகவும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் செய்யப்பட்டுள்ளதாக உபெர் நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்த முடிவு மிகவும் கடினமான முடிவு என்றும் ஆனால் அவசியமான முடிவு என்று கூறியுள்ள உபெர் நிறுவனம் எங்கள் நிறுவனத்தின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்தவும் நீண்ட கால வளர்ச்சிக்கு சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் உபெர் நிறுவனம் தற்போது அதிக போட்டியை எதிர்கொண்டு வருகிறது என்றும் எனவே லாபத்தை மேம்படுத்துவதற்கு பணி நீக்கம் அவசியம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த நிறுவனம் சரக்கு பிரிவில் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இம்முறை ஆட்சேர்ப்பு பிரிவில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பணியாளர்களை அமர்த்தும் நோக்கம் இப்போதைக்கு இல்லை என்பதால் இந்த பிரிவில் பெரும்பாலான பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற ஊழியர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் இனிமேல் இப்போதைக்கு பணிநீக்க நடவடிக்கை இருக்காது என்ற உபெர் உறுதி அளித்துள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் உபெர் நிறுவனம் தன் எதிர்கால வளர்ச்சிக்காகவும் திட்டத்திற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்றும் ஏற்கனவே வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் வேலை மிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...