செங்கோட்டையனுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த மரியாதை, காரணமாக அவர் எடுத்த இந்த முடிவு அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு சரியான முடிவுதான் என்று திட்டவட்டமாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் அவர் இனிமேல் சாதிக்க எதுவும் இல்லை. குறிப்பாக, ஈபிஎஸ் மீது தொடர்ச்சியாக கேள்வியெழுப்பி வெளிப்படையாக கெடு கொடுப்பது உள்பட சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அ.தி.மு.க.வில் அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவார் என்ற நிலை உருவானது. செங்கோட்டையன் தலைமையை நேரில் பார்த்தபோது ஈபிஎஸ் சரியாக பதிலளிக்கவில்லை என்ற வருத்தமும், எந்த ஆலோசனையையும் ஏற்க தயாராக இல்லை என்ற மனநிலையும் அவருக்கு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக தன்னை ஒதுக்கியபோது, டெல்லி சென்று பாஜக தலைமையிடம் செங்கோட்டையன் முறையிட்ட போது, ஈபிஎஸ் தான் முக்கியம் என கருதிய பாஜக தலைமை செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதே தவிர அவருக்கு ஆதரவாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் பா.ஜ.க. மீது அவருக்கு கோபம் இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த முடியாது. அதனால், செங்கோட்டையன் அ.தி.மு.க-வை விட்டு விலகி, தன்னை ஒதுக்கியவர்களுக்கு பாடம் கற்பிக்கவும், தான் யார் என்பதைக் காட்டவும் ஒரு புதிய உத்வேகத்துடன் த.வெ.க. பக்கம் தாவியுள்ளார்.
த.வெ.க. ஒரு புதிய கட்சி என்பதாலும், வரவிருக்கும் தேர்தலில் அதன் பங்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும், பல சர்வேக்களின்படி அதன் ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுவதாலும், செங்கோட்டையனின் வருகை த.வெ.க-விற்கு ஒரு பெரிய பூஸ்ட் ஆகும். அ.தி.மு.க-வில் செய்ய முடியாத சில விஷயங்களை த.வெ.க-வில் செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். புகழேந்தி, கே.சி. பழனிசாமி போன்றோர் அவர் அவசரப்பட்டுவிட்டார் என்று கூறினாலும், ஈபிஎஸ் அவரை ஒரு சவாலாகப் பார்த்துவிட்டதாலும், பா.ஜ.க. இவரை வைத்து அ.தி.மு.க-வுக்குள் விளையாடுகிறது என்ற எண்ணம் ஈபிஎஸ்-க்கு வந்துவிட்டதாலும், செங்கோட்டையன் பொறுமை காப்பது கடினமாகிவிட்டது.
செங்கோட்டையனுக்கு இருந்த மற்ற தேர்வுகள் மிக குறைவு. ஓ.பி.எஸ்., தினகரன் அணியுடன் சேர்ந்திருந்தால், நாளை அவர்களே பா.ஜ.க. கூட்டணிக்குள் போய்விட்டால் இவருக்கு பெரிய இழப்பு ஏற்படும். தி.மு.க-வில் சேர்ந்திருந்தால், அது ஒருநாள் செய்தியாக மட்டுமே ஆகியிருக்கும்; மேலும், தி.மு.க. அமைச்சர்கள் பலர் அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்கள் என்பதால், அங்கு பெரிய தனித்துவத்துடன் இயங்க முடியாது. அவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்தால், தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படும். எம்ஜிஆரை குருவாகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் இருந்துவிட்டு திமுகவுக்கு செல்வது அவரது 50 ஆண்டு கால அரசியலில் கறை படிந்துவிடும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இதனால், தனது அரசியல் அனுபவத்துக்கும், தனித்துவத்துக்கும் மதிப்பு அளிக்கும் த.வெ.க-வே சரியான இடம் என்று அவர் கருதியுள்ளார்.
52 வருட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் த.வெ.க-விற்குள் ஒரு ராஜகுருவாக இயங்க முடியும். இதுவே த.வெ.க.வுக்கும் தேவையாக இருக்கிறது. செங்கோட்டையன் கட்சிக்குள்ளே ஒரு தொடர் அரசியல் நடவடிக்கையை செயல்படுத்தவும், தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் எப்படி எதிர்கொள்வது, எந்த இடத்தில் அடித்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் போன்ற விஷயங்களில் விஜய்க்கு ஆலோசனை வழங்கவும் முடியும். மேலும், அவரது வருகை, Gen Z இளைஞர்கள் மத்தியில் ‘செங்கோட்டையன் வந்துவிட்டார், இனிமேல் நாமும் மேலே போவோம்’ என்ற ஒரு பெரிய கொண்டாட்ட உணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைவதற்கு முன்பே, “அ.தி.மு.க. – த.வெ.க. கூட்டணி இனிமேல் வாய்ப்பில்லை” என்ற உறுதியான கமிட்மென்ட்டுடன் தான் அவர் உள்ளே சென்றிருக்கிறார். இதுதான் இந்த நிகழ்வில் இருக்கும் மிக வலிமையான செய்தி. செங்கோட்டையன், மெச்சூரிட்டி இல்லாத ஜென் Z தலைவர்களுடன் எப்படி பழகுவார் என்பது அவருடைய சவால் என்றாலும், அ.தி.மு.க-வின் இன்னொரு வடிவமாக தி.மு.க-வை கடுமையாக எதிர்க்கும் ஒரு புதிய அ.தி.மு.க.வாக த.வெ.க.வை கட்டமைக்க அவர் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
