தவெக தனித்து போட்டி என்பது இனி உறுதியாக இல்லை.. வலை விரிக்கும் பாஜக.. துண்டு போட்டு காத்திருக்கும் காங்கிரஸ்.. இதற்கிடையில் ஆட்டத்தை தொடங்கும் திமுக.. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க திமுக முடிவு? பரபரப்பின் உச்ச கட்டத்தில் தமிழ்க அரசியல்..!

தமிழ்நாடு அரசியல் களம், விஜய்யின் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியின் வரவால், கூட்டணி வியூகங்கள் குறித்த உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. ஆரம்பத்தில், ‘தனித்துப் போட்டி’, ‘திராவிட கட்சிகளுக்கு மாற்று’ என்ற உறுதியான நிலைப்பாட்டில்…

vijay namakkal

தமிழ்நாடு அரசியல் களம், விஜய்யின் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியின் வரவால், கூட்டணி வியூகங்கள் குறித்த உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. ஆரம்பத்தில், ‘தனித்துப் போட்டி’, ‘திராவிட கட்சிகளுக்கு மாற்று’ என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு பெரிய அரசியல் கட்சியின் துணையும், வலுவான கூட்டணி பலமும் அவசியம் என்பதை உணர்ந்திருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

இதனால், த.வெ.க. தனித்து போட்டி என்ற முடிவிலிருந்து பின்வாங்கி, ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது தீவிரமாக பேசப்படுகின்றன. விஜய்யை ஈர்க்க பாஜகவும் காங்கிரஸும் வலை விரிக்க, இந்த சூழலை பயன்படுத்தி ஆளுங்கட்சியான திமுக தனது ராஜதந்திர ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

தேசிய அளவில் தனது கூட்டணியை பலப்படுத்த விரும்பும் பாஜக, தமிழ்நாட்டில் ஒரு பிரபலம் தலைமை தாங்கும் த.வெ.க-வை இணைக்க தீவிர முயற்சி செய்யும். விஜய் போன்ற ஒரு நட்சத்திர முகம் இணைந்தால், அது இளைஞர் வாக்குகளை ஈர்ப்பதுடன், திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் வர உதவும் என பாஜக நம்புகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது, சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழக்க நேரிடும் என்ற மிகப்பெரிய சவாலை விஜய் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்
திராவிட கட்சிகளுக்கு எதிரான ஒரு புதிய தேசிய மாற்று அணியை உருவாக்க காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் சம்பவத்திற்கு பிறகு, ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசியதாக வந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமாக உள்ளது.
விஜய் இருப்பதால் தமிழகத்தில் காங்கிரஸுக்கு நம்பகமான கூட்டாளியாக இனி திமுகவின் தயவு தேவைப்படாது. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், அதிக தொகுதிகள் கேட்கலாம் என காங்கிரஸ் நம்புகிறது. இது திமுகவுக்கு செல்லும் வாக்குகளைப் பிரிக்கும் ஆற்றல் கொண்டது.

த.வெ.க-வின் இந்த நகர்வுகளும், காங்கிரஸின் மௌனமான ஆதரவும் ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. இதை சமாளிக்க திமுக இரண்டு முக்கியமான ராஜதந்திரங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்து கூட்டணியில் தக்க வைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதலான தொகுதிகள் தரப்படும் என்ற வாக்குறுதிகள் தரவும் வாய்ப்பு உள்ளது.

அரசியலில் ‘அனுபவம் இல்லாமை’, ‘திரைப் பிரபலம் மட்டுமே’, ‘பொறுப்பற்ற தன்மை’ ஆகிய விமர்சனங்களை மக்களிடையே வலுவாக எடுத்து செல்வதன் மூலம் விஜய்யின் அரசியல் பிம்பத்தை சிதைக்க திமுக முயற்சிக்கும். மேலும், கரூர் சம்பவத்தில் நீதி விசாரணையை விரைவுபடுத்துவதன் மூலமும், நிர்வாக பிழைகளை கையாள்வதன் மூலமும் அரசு மீது திரண்டிருக்கும் கோபத்தை விஜய் பக்கம் திருப்பவும் முயற்சி நடக்கலாம்.

மொத்தத்தில், விஜய்யின் அரசியல் நகர்வு, தமிழகத்தின் இரு பெரும் திராவிட கூட்டணிகளின் வடிவத்தையும் மாற்றும் ஆற்றல் கொண்டது. த.வெ.க. – பாஜக கூட்டணி அமைந்தால் இது சிறுபான்மையினரை முழுமையாக திமுக பக்கம் திருப்பும்; ஆனால் இளைஞர்களின் வாக்குகளையும், திமுகவுக்கு எதிரான இந்து வாக்குகளையும் மொத்தமாக ஒருங்கிணக்கும்.

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இது திமுகவின் கூட்டணியில் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தும். சிறுபான்மையினர் வாக்குகள் கைவிட்டு போகும். ஆனால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரியும் பாசிட்டிவ்வும் உண்டு.

வரும் நாட்களில், தமிழக வெற்றிக் கழகம் எந்தப் பக்கம் சாய்கிறது என்பதை பொறுத்தே திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கும் என்று கூறப்படுகிறது.