இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், துருக்கி கடற்படைக்குச் சேர்ந்த TCG Buyukada என்ற போர்க்கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை “நல்லிணக்க பயணம்” என பாகிஸ்தான் கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவே இந்த பயணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில், துருக்கியின் இந்த நடவடிக்கை பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்வரை போராட்டம் தொடரும் என இந்தியா உறுதி கூறியுள்ளது. அதனடிப்படையில், பாகிஸ்தானுடன் உள்ள சிந்து ஆற்றின் நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது, பாகிஸ்தானிய கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்கள் தடை, பாகிஸ்தானிய விமானங்களுக்கு இந்திய வான்வழி மூடல் மற்றும் தூதரக நிலை குறைத்தல் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் கடற்படை பொது தகவல் துறை வெளியிட்ட அறிக்கையில், TCG Buyukada கப்பல் கராச்சி துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், துருக்கி மற்றும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இதை வெகு உற்சாகமாக வரவேற்றதாகவும் கூறியுள்ளது.
“கராச்சியில் தங்கும் நாட்களில், துருக்கி கடற்படையினருடன் பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் பல தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பங்கேற்கவுள்ளனர்,” என DGPR தெரிவித்தது.
மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சி என்றும், இந்த பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான உறுதியான நம்பிக்கையின் அடையாளம் என்றும் கூறப்பட்டுள்ளது.
துருக்கியும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் அரசியல் துறைகளில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. இருநாடுகளும் பொதுவாக இராணுவ பயிற்சிகள் நடத்துகின்றன.
துருக்கியின் பாதுகாப்பு நிறுவனங்கள், பாகிஸ்தானின் Agosta 90B வகை நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த உதவியுள்ளன. மேலும், ட்ரோன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் துருக்கி கப்பல் பாகிஸ்தானில் வருகை தந்தது தற்செயலா? அல்லது இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு கொடுக்கும் நடவடிக்கையா? என பாதுகாப்பு வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியா இதனை எப்படி கையாளும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
