திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் டிடிவி தினகரன்.. விஜய்க்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்ததால் கோபமா? திமுக கூட்டணிக்கு செல்கிறார்களா டிடிவி மற்றும் ஓபிஎஸ்? கரூர் சம்பவம் ஏற்படுத்தும் திருப்பங்கள்..!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கூடுதல் நெருக்கத்தை காட்ட தொடங்கியிருப்பதுடன், அவருக்கு ஆதரவு…

ttv ops
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கூடுதல் நெருக்கத்தை காட்ட தொடங்கியிருப்பதுடன், அவருக்கு ஆதரவு குரல்களையும் ஓங்கி ஒலிக்கிறார். இதற்கு பின்னால் என்.டி.ஏ. கூட்டணிக்கும், விஜய்யின் த.வெ.க.வுக்கும் செக் வைக்கக்கூடிய சில முக்கியமான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்குப் பிறகு, தி.மு.க. மற்றும் த.வெ.க.வுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி, பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுவது போல, த.வெ.க.வுக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கறிஞரை போல வாதாடுகிறார்.” கரூர் சம்பவத்துக்கு ஆளும் தி.மு.க.தான் காரணம் என்று சொல்வது ‘தரம் தாழ்ந்த அரசியல்’ என்றும், தி.மு.க.வை தாக்கும் ஈ.பி.எஸ்ஸின் நிலைப்பாடு தவறு என்றும் டிடிவி தினகரன் சாடினார்.
பழனிசாமிக்கு இணையாக பா.ஜ.க.வும் இதில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. மேலும், தூத்துக்குடி சம்பவத்துக்குக் குழு அனுப்பாத பா.ஜ.க., கரூருக்கு மட்டும் குழு அனுப்பியது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பேச்சில் பொறுப்புணர்வு இருக்கிறது; யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, ஆளும் தி.மு.க.வுக்கு வெளிப்படையாக பாராட்டுப் பத்திரம் வாசித்தார். “விஜய் வெளியிட்ட வீடியோ வருத்தம் அளிக்கிறது. என் நெருங்கிய நண்பரான அண்ணாமலையின் பேச்சும் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு நிலை எடுத்த நிலையில், இப்போது டி.டி.வி. தினகரனும் தி.மு.க.வுக்கு ஆதரவான குரல் கொடுத்திருப்பது, அவர் ஒரு அரசியல் ஆட்டம் ஆடுவதாகவே பார்க்கப்படுகிறது.
ஈ.பி.எஸ்ஸை ஏற்க மறுக்கும் தினகரன், பா.ஜ.க. கூட்டணியில் ஈ.பி.எஸ்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் அதிருப்தியில் உள்ளார். முன்னதாக, அ.ம.மு.க. கூட்டணியில் இல்லாதபோதும் பா.ஜ.க.வுக்கு பக்கபலமாக இருந்தது. ஆனால், ஈ.பி.எஸ்ஸுக்காக அ.ம.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், கூட்டணியில் இல்லை என வெளிப்படையாக அறிவித்தார்.
ஆரம்பத்தில், டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய் பக்கம் செல்லலாம் என எண்ணி, தொடர்ந்து அவருக்கு ஆதரவான குரல்களை எழுப்பி வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு பா.ஜ.க. நேரடியாக விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்டி, அவரை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்தது. இது, “விஜய்யை வைத்தே நமக்குப் பா.ஜ.க. செக் வைக்கிறதா?” என்று தினகரனை யோசிக்க வைத்தது.
இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான தி.மு.க.வை பாராட்டி, இ.பி.எஸ் மற்றும் பா.ஜ.க.வை விமர்சித்ததன் மூலம், தினகரன் என்.டி.ஏ.வுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளார். “எங்கள் ஆதரவு இல்லாமல் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியாது, குறிப்பாக தென்மாவட்டங்களில் அ.ம.மு.க. பலமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டி, தனது தேவையை அதிகரித்து கொள்ளவும் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.