பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான தற்போதைய அரசியல் நகர்வுகள், பாகிஸ்தானை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளன. காசா பகுதியில் அமைதியை நிலைநாட்ட சுமார் 25,000 பாகிஸ்தான் வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கை, ஆசிம் முனீருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அமெரிக்காவில் ட்ரம்பை சந்தித்தபோது இதற்கு சம்மதம் தெரிவித்த முனீர், தற்போது தாயகம் திரும்பியவுடன் உள்நாட்டு எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால், இஸ்ரேலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுகிறது என்ற பிம்பம் அந்நாட்டு மக்களிடையே உருவாகும். கடந்த 75 ஆண்டுகளாகக் காஷ்மீர் மற்றும் பாலஸ்தீன விவகாரங்களை வைத்தே அரசியல் செய்து வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இது ஒரு தற்கொலைக்கு சமமான முடிவாகும். ஒருவேளை காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு பதில் தாக்குதல் நடத்துவது இஸ்லாமிய உலகிற்கு எதிரான செயலாக பார்க்கப்படும். இது பாகிஸ்தான் ராணுவத்திற்குள் இருக்கும் வீரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
மறுபுறம், அமெரிக்காவின் அழுத்தமும் நிதி நெருக்கடியும் முனீரை துரத்துகின்றன. ட்ரம்ப் வழங்கிய F-16 போர் விமானங்களுக்கான நிதி மற்றும் பிற சலுகைகளுக்கு பிரதிபலனாக, இந்த துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்பது ட்ரம்பின் பிடிவாதம். சவூதி அரேபியா இதற்கு பின்னால் இருந்து நிதி உதவி வழங்க முன்வந்தாலும், இந்த விவகாரம் ரகசியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால், இஸ்ரேல் வழியாக துருப்புக்களை அனுப்ப வேண்டுமானால், இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்மட்ட கமாண்டர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டிடிபி மற்றும் பிஎல்ஏ போன்ற அமைப்புகளால் பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் அளவில் பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், காசாவிற்கு வீரர்களை அனுப்புவது ராணுவத்தின் பலத்தை குறைக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும், சீனா போன்ற நட்பு நாடுகளின் திட்டங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதும் அவர்களின் கவலையாக உள்ளது.
ஆசிம் முனீர் தற்போது ஒரு செய்வறியாத நிலையில் இருக்கிறார். அமெரிக்காவிற்கு சொன்னபடி வீரர்களை அனுப்பவில்லை என்றால், சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதுடன், IMF போன்ற அமைப்புகளிடம் இருந்து வரும் நிதியுதவியும் நிறுத்தப்படும். ஏற்கனவே பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்க ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட தொடங்கிவிட்டன. ஆனால், வீரர்களை அனுப்பினால் உள்நாட்டில் மதவாத அமைப்புகளின் எதிர்ப்பால் ராணுவத்தின் ஆட்சி அதிகாரமே ஆட்டம் காணக்கூடும்.
இறுதியாக, ஆசிம் முனீர் ஒரு இடைக்கால தீர்வை தேட முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான ராணுவ வீரர்களை அனுப்பாமல், ஓய்வு பெற்ற வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் அனுப்புவது அல்லது ஒரு சிறிய கண்காணிப்பு குழுவை மட்டும் அனுப்புவது போன்ற தந்திரங்களை அவர் கையாளலாம். ஆனால், நோபல் அமைதி பரிசுக்காக இந்த விவகாரத்தை விரைந்து முடிக்கத் துடிக்கும் ட்ரம்ப், முனீரை அவ்வளவு எளிதில் விடுவிக்க மாட்டார். பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்காலம் இந்த ஒரு முடிவில்தான் அடங்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
