இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையமான (TRAI) மக்கள் மத்தியில் மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
TRAI அதிகாரிகள் போல் நடித்து, மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று TRAI தெரிவித்துள்ளது. எனவே மோசடிக்காரர்கள், TRAI அதிகாரிகள் போல் நடிக்கும் மோசடியாளர்கள் அப்பாவி பொதுமக்களுக்கு போன் செய்து அவர்களுடைய மொபைல் நம்பர்களை தடை செய்வதாகவும், குற்றச்சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி பயமுறுத்துகின்றனர். இதன் மூலம், பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள்.
இதுகுறித்து TRAI வெளியிட்ட அறிக்கையில், “TRAI எப்போதும் தொலைபேசி நம்பரை துண்டிக்க நேரடியாக பயனாளர்களை தொடர்பு கொள்ளுவதில்லை. இத்தகைய மெசேஜ்கள் அனுப்புவதோ, மூன்றாம் தரப்பினரிடம் இந்த பொறுப்புகளை ஒப்படைத்ததோ இல்லை.
மொபைல் துண்டிப்பு சம்பந்தமான அனைத்து விவகாரங்களும், அதாவது பில் பிரச்சனை, KYC தகவல் குறைபாடு, அல்லது தவறான பயன்பாடு என எதுவாக இருந்தாலும், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வழியேதான் நடத்தப்படும். எனவே TRAI என சொல்லி மர்ம நபர்கள் அழைத்தால் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது.
TRAI அதிகாரிகள் என நடித்து, பயனாளர்களை அழைத்து அல்லது மெசேஜ் அனுப்பி, “குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் சிம் செயலிழக்க செய்யப்பட்டு, கனெக்சன் துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி அழைப்பு வந்தால் பொதுமக்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?
முதலில் இதுபோன்ற அழைப்புகள்/மெசேஜ்களால் அச்சப்பட வேண்டாம். TRAI என கூறி வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ கஸ்டமர் கேர் எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து ஆலோசனை கேட்கலாம். சந்தேகத்திற்கிடமான தகவல்களை “சஞ்சார் சாத்தி” (Sanchar Saathi) தளத்தில் உள்ள Chakshu வசதி மூலம் புகாரளிக்கலாம். அதற்கான இணையதள முகவரி இதோ: https://sancharsaathi.gov.in
மேலும் சைபர் குற்றங்கள் குறித்த புகாருக்கு 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://cybercrime.gov.in தளத்தில் புகாரளிக்கலாம்.