இதற்கு முன் 5 முறை கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்.. பங்குச்சந்தை பரிதாபங்கள்..!

  இந்திய பங்கு சந்தை கடந்த பல ஆண்டுகளில் பல அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சிகளை பார்த்துள்ளது. ஒவ்வொரு முறையும் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்ததால், பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று சென்செக்ஸ் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்து, கடந்த கால…

share 1280

 

இந்திய பங்கு சந்தை கடந்த பல ஆண்டுகளில் பல அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சிகளை பார்த்துள்ளது. ஒவ்வொரு முறையும் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்ததால், பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று சென்செக்ஸ் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்து, கடந்த கால இழப்புகளை மீண்டும் நினைவூட்டியது. இப்போது அந்த வரலாற்றுப் பயணத்தில் முக்கியமான சில வீழ்ச்சிகளை பார்க்கலாம்:

1. ஹர்ஷத் மேத்தா மோசடி வீழ்ச்சி (1992)

1992ல் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்த முதல் பெரிய சம்பவமாகும். டலால் வீதியின் “பிக் புல்” என அழைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா, வங்கிகளின் தொகை மாற்ற முறையை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையை மோசடியால் உயர்த்தியதாக கண்டுபிடிக்கப்பட்டார்.

₹4,000 கோடிக்கு மேற்பட்ட இந்த மோசடி வெளிப்பட்டவுடன் சென்செக்ஸ் ஒரே நாளில் 570 புள்ளிகள் (12.7%) சரிந்தது. இது பங்கு சந்தை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அதிர்வாக இருந்தது. அதன் பிறகு சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலாக்கப்பட்டன.

2. கேதன் பாரேக் மோசடி வீழ்ச்சி

இந்த மோசடி மீண்டும் ஒருமுறை வரலாற்றை மீட்டெடுத்தது. பங்கு முகவரான கேதன் பாரேக், குறிப்பிட்ட பங்குகளை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதன் விளைவாக சென்செக்ஸ் 176 புள்ளிகள் (3.7%) வீழ்ந்தது.

இந்த வீழ்ச்சி, அதே சமயத்தில் ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கத்துடன் இணைந்ததால் முதலீட்டாளர்கள் மேலும் பதட்டமடைந்தனர்.

3. தேர்தல் அதிர்ச்சி வீழ்ச்சி (2004)

பங்குச்சந்தை எப்போது மத்தியில் நிலையான அரசை விரும்பும். ஆனால் எதிர்பார்ப்பு தவறும்போது விளைவுகள் கடுமையாக இருக்கலாம். 2004ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்பாராத தோல்வி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றியைத் தந்தது.

இதனால் சென்செக்ஸ் 842 புள்ளிகள் (11.1%) வீழ்ந்தது. இது ஒரு முக்கியமான பாடமாக அமைந்தது. அரசியல் மாற்றங்கள் பங்கு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கோணமும் முதலீட்டாளர்களுக்கு தெரிய வந்தது.

4. உலகளாவிய நிதி நெருக்கடி (2008)

2008ல் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி, உலக சந்தைகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. 2008 ஜனவரி 21ஆம் தேதி, சென்செக்ஸ் 1,408 புள்ளிகள் (7.4%) வீழ்ந்தது. ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சிகளில் ஒன்று.

5. கொவிட்-19 பெருந்தொற்று வீழ்ச்சி (2020)

2020 மார்ச் 23ஆம் தேதி, இந்திய பங்கு சந்தையின் வரலாற்றில் மிக மோசமான நாளாக அமைந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் (13.2%) வீழ்ந்தது. பொருளாதார நடவடிக்கைகள் திடீரென நிறுத்தப்பட்டதால் முதலீட்டாளர்கள் பரபரப்படைந்தனர்.

இது சென்செக்ஸ் வரலாற்றில் விழுந்த மிகப்பெரிய வீத வீழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டது.

பீனிக்ஸ் பறவை போல் சாம்பலிலிருந்து எழும் சந்தை

மேற்கண்ட 5 கடுமையான வீழ்ச்சிகளுக்குப் பிறகும், இந்திய பங்கு சந்தை மீண்டுள்ளது. ஒவ்வொரு வீழ்ச்சியும் ஒரு புதிய பாடமாக முதலீட்டாளர்களுக்கு அமைந்துள்ளது. அதேபோல் ஒழுங்குமுறைகள் வலுப்படுத்தப்பட்டன, அபாய மேலாண்மை மேம்படுத்தப்பட்டது, நிதி அமைப்புகள் உறுதியாக உருவாகின.

இப்போது முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாகவும், ஒரே நேரத்தில் நம்பிக்கையுடனும் சந்தையை அணுகுகிறார்கள். கடந்த கால இழப்புகள், எதிர்கால வெற்றிக்கு வழிகாட்டியாகும் என்ற நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் பயணிக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீணாகாது என்று நம்புவோம்.