தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கையில், காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் காட்டியிருக்கும் புதிய பாதையை தேர்ந்தெடுப்பதா என்பதில் அந்தக் கட்சியினரிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. “வந்தா வாங்க, வராட்டி போங்க” என்கிற ரீதியில் திமுக தரப்பு கறாரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்யின் தரப்பில் வெறும் ஒரு நாள் மட்டுமே கெடு விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸின் மௌனம் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, தொகுதிப் பங்கீட்டில் ஒரு சில இடங்களை மட்டுமே விட்டுக்கொடுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இடங்களை விட இந்த முறை காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என தெரிகிறது. “கேட்டை மூடிய திமுக” என்ற பிம்பம் உருவானதற்கு இதுவே முக்கிய காரணம். காங்கிரஸை தங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர சொல்லும் திமுகவின் பிடிவாதம், ஒரு தேசிய கட்சிக்குத் தமிழகத்தில் இருக்கும் மரியாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் திமுக தரப்பு தரும் குறைந்தபட்ச இடங்களை ஏற்றுக்கொண்டு தன்மானத்தை இழப்பதா அல்லது மாற்று வழியை தேடுவதா என்பதே காங்கிரஸின் தற்போதைய திரிசங்கு நிலை.
மறுபுறம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸிற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தாலும், அதற்கு பதில் சொல்ல ஒரு குறுகிய காலக்கெடுவையே விதித்துள்ளதாக தெரிகிறது. விஜய்யின் வருகை திமுகவின் வாக்கு வங்கியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் அவருடன் இணைந்தால் அது மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனால், விஜய்யின் அணியில் இணைந்தால் அங்கு காங்கிரஸிற்கு போதிய முக்கியத்துவம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் நீடிக்கின்றன. காலத்தின் அருமை கருதி விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காங்கிரஸ், வழக்கம் போல தாமதிப்பது அதன் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனம் அதன் தலைமை பண்பில் நிலவும் குழப்பம்தான். ஒரு கூட்டணியின் இறுதி முடிவை யார் எடுப்பார் என்பதில் இன்று வரை ஒரு தெளிவு இல்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என ஒவ்வொரு மட்டத்திலும் முடிவுகள் எடுக்கப்படும் போது, அது மாநில தலைமையை திக்குமுக்காட செய்கிறது. தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தாலும், டெல்லி மேலிடத்தின் அனுமதியின்றி ஒரு சிறு துரும்பை கூட அசைக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. இந்த குழப்பமான சூழலால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியாகி, இறுதியில் மற்ற கட்சிகள் ஒதுக்கும் மிச்ச சொச்ச இடங்களை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
தொடர்ச்சியாக கூட்டணியில் நிலவும் இந்த இழுபறி நிலையால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். “கூட்டணியை கூட தெளிவாக முடிவு செய்ய முடியாத கட்சிக்கு எதுக்கு அரசியல்?” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. யார் முடிவெடுப்பது என்ற குழப்பத்தால், தேர்தல் களத்தில் மற்ற கட்சிகள் வேலையை தொடங்கிய பின்னரும், காங்கிரஸ் இன்னும் பேச்சுவார்த்தை மேசையிலேயே அமர்ந்திருக்கிறது. தொண்டர்கள் தங்கள் தலைவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில், டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே நிலவும் தகவல் பரிமாற்ற குறைபாடுகள் கட்சியின் எதிர்காலத்தை சூனியமாக்கி வருகின்றன.
முடிவாக, 2026 தேர்தல் என்பது தமிழக காங்கிரஸிற்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாகும். இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் முடிவே அக்கட்சியின் அடுத்த பத்து ஆண்டுகால அரசியலை தீர்மானிக்கும். திமுகவின் கறாரான போக்கையும், விஜய்யின் அதிரடி கெடுவையும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ், தனது உட்கட்சி விவகாரங்களை சரிசெய்து ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக அரசியலில் காங்கிரஸ் ஒரு தேவையற்ற சக்தியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, டெல்லி மேலிடம் தமிழக சூழலை புரிந்துகொண்டு செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
