தமிழக அரசியல் வரலாற்றில் தலைநகர் சென்னை எப்போதும் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கும் இடமாகவே இருந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் புதிதாக களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 தேர்தலில் 16 தொகுதிகளையும் தன்வசப்படுத்திய திமுக, இந்த முறையும் அதே வெற்றியை தக்கவைக்க தீவிரமாக உள்ளது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபுவின் ஆதிக்கம் வேட்பாளர் தேர்விலும், தேர்தல் வியூகங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், அதிமுக தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.
வடசென்னையின் முக்கிய தொகுதியான ஆர்.கே. நகரில், திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ எபினேசருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அங்கு மருது கணேஷ் அல்லது ஊடகங்களில் பிரபலமான டாக்டர் சயது அபீசுல்லா ஆகியோர் திமுக சார்பாக பரிசீலிக்கப்படுகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் அல்லது நீண்டகாலமாக பணியாற்றி வரும் நடிகை விந்தியா ஆகியோர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பெரம்பூர் தொகுதியில் உதயநிதிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜோயல் போட்டியிடக்கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. அதிமுக கூட்டணியில் என்.ஆர். தனபாலன் மீண்டும் இங்கு போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தொடர்ச்சியாக வாக்கு வித்தியாசத்தை அதிகரித்து வரும் அவர், இம்முறையும் சாதனை வெற்றியை இலக்காக கொண்டுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் அல்லது முன்னாள் மேயர் வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுவார் என்றும் அவரை எதிர்த்து குஷ்பு போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
வில்லிவாக்கம் தொகுதியில் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது அமைச்சர் சேகர் பாபுவின் பரிந்துரையின் பேரில் ஒரு புதுமுகம் அறிமுகப்படுத்தப்படுவாரா என்ற விவாதம் திமுகவுக்குள் நிலவுகிறது. இங்கு ஜே.சி.டி பிரபாகர் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது ஒரு சுவாரசியமான திருப்பமாகும்.
தனித் தொகுதியான திருவிக நகரில், தற்போதைய எம்எல்ஏ தாயகம் கவிக்கு எதிராக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால், அவருக்கு பதிலாக சென்னை மேயர் பிரியாவை களமிறக்க திமுக திட்டமிடலாம். இருப்பினும், தாயகம் கவிக்கு ஆ. ராசாவின் ஆதரவு இருப்பதால், அங்கு வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.
எழும்பூர் தனி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பரந்தாமன் மீண்டும் நிறுத்தப்படலாம் அல்லது தமிழன் பிரசன்னா போன்ற புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதால், அங்குப் பலப்பரீட்சை கடுமையாக இருக்கும் என தெரிகிறது. ராயபுரம் தொகுதியில் அதிமுகவின் ஜெயகுமார் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை எதிர்க்க திமுக ஒரு வலுவான வேட்பாளரை தேடி வருகிறது.
தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில், சைதாப்பேட்டையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அமமுகவின் செந்தமிழன் போட்டியிட வாய்ப்புள்ளது. தி. நகர் தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ கருணாநிதிக்கு மாற்றாக ராஜா அன்பழகன் பெயர் அடிபடுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் திமுகவின் வேலு மீண்டும் போட்டியிடக்கூடும், அதே சமயம் அதிமுக கூட்டணியில் கோவை சத்யன் அல்லது காயத்ரி ரகுராம் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாகவே களம் காண திட்டமிட்டுள்ளது. அங்கு துணை மேயர் மகேஷ் அல்லது டாக்டர் யாழினி ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இத்தேர்தலில் ஒரு ‘எக்ஸ்-ஃபேக்டராக’ பார்க்கப்படுகிறது. விஜய் விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்தின் தேமுதிகவும் வலுவாக இருப்பதால், அங்கு ஒரு மும்முனை போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது. 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதாக மட்டுமில்லாமல், தமிழக அரசியலில் புதிய சக்திகளின் வரவை அங்கீகரிக்கும் ஒரு களமாகவும் அமையப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

