திருப்பதி திருமலைக்கு மேல் விமானங்கள் பறப்பதை தடை செய்ய வேண்டும் என TTD தலைவர் பி.ஆர். நாயுடு அவர்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்து மத மக்களின் புனித கோயில்களில் ஒன்றான திருப்பதி திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவிலின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக திருமலைக்கு மேல் விமானங்களை இயக்குவதை தடை செய்ய வேண்டும் எனவும், அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் TTD தலைவர் பி.ஆர். நாயுடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில், கோயிலின் புனிதத்தன்மை மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, திருமலைக்கு மேல் விமானங்கள் இயக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, திருமலை பகுதியில் குறைந்த உயரத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வானியல் செயல்பாடுகள் நடப்பதாகவும், இது திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் புனித சூழலை பாதிக்கக்கூடும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருமலையின் புனித தன்மை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பாதுகாக்க இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
TTD தலைவர் அவர்களின் இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
