முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சியில் நிர்வாக அமைப்பில் தற்போது ஒரு வெளிப்படைத்தன்மை வரத் தொடங்கியுள்ளது. அடிமட்ட அளவில் இருந்து, அதாவது கிரவுண்ட் லெவலில் இருந்து மாற்றத்திற்கான சில உள்ளீடுகள் வர ஆரம்பித்துள்ளன. மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய ஊழல், லஞ்சம் வாங்குவது போன்ற காரியங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. இந்த மாற்றங்கள் யாவும் எடுத்தவுடனேயே ஒரே நாளில் நடந்துவிட முடியாது; ஏனென்றால் யாரிடமும் எந்த ஒரு மந்திரக் கோலும் கிடையாது. இது கணினியும் அல்ல, ஒரு பட்டனை அழுத்தினால் எல்லாமே மறைந்து புது ஆவணம் வந்துவிடுவதற்கும்.
திரைப்படங்களில் வருவது போல, ஒரே நாளில் உடனடியாக எதையும் மாற்றிவிட முடியாது. கடந்த ஐம்பது நாட்களில் நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால், பல சிறிய சிறிய விஷயங்களில் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளதை அறியலாம். இதில் ஒரு உதாரணத்தைக் கூறலாம்; ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்தி வரும் நபர் ஒருவர், கடந்த இருபது வருடங்களாக தொழிலாளர் நல அலுவலகத்தில் வருடத்திற்கு இவ்வளவு என்று லஞ்சம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த இருபது வருடங்களில் தமிழகத்தில் எத்தனை முறை திமுக மற்றும் அதிமுக ஆட்சிகள் மாறியுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆட்சி மாறினாலும் வருடாவருடம் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்ற ஒரு கணக்கு அங்கே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த முறை அவர் அங்கு சென்றபோது, அங்கிருந்த அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்துவிட்டார். இதற்கான காரணத்தை அவர் கேட்டபோது, ‘மேலதிகாரிகள் வாங்கச் சொன்னால் நான் வாங்குவேன், ஆனால் மேலிடத்திலிருந்து வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள், அதனால் நான் வாங்க மாட்டேன்’ என்று மிக எளிமையாகக் கூறிவிட்டார்.
மற்றொரு சுவாரசியமான நிகழ்வு டெல்டா மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு ஒருவர் தனது புதிய கட்டிட ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தார். அவருடைய விண்ணப்பக் கோப்பு நீண்ட நாட்களாக தேங்கி கிடந்தது. புதிய ஆட்சி அமைவதற்கு முன்னரே, அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பிறகு இதை பார்த்து கொள்ளலாம் என்று அவரும் காத்திருந்தார். புதிய ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களுக்கு பிறகு அவருக்கு ‘கொயரி’ என்று ஒரு கடிதம் வந்தது.
பொதுவாகத் தொழில் செய்பவர்களுக்கு ‘கொயரி’ என்று அழைப்பு வந்தால், அது ஏதோ ஒரு பேரம் பேசுதலுக்காகத்தான் இருக்கும் என்று நினைப்பார்கள். இவரும் புதிய ஆட்சி வந்து இருபது நாட்களிலேயே இவர்களும் ஆரம்பித்துவிட்டார்களா என்ற எண்ணத்துடன்தான் அந்த அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் அங்குச் சென்று பார்த்தபோது, அதிகாரிகள் கேட்ட சந்தேகங்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவையாக இருந்தன.
அவரது ஆவணங்களில் சில விடுபட்டிருந்தன, அவற்றை மட்டுமே சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். அவர் மீண்டும் எப்போது வர வேண்டும் என்று கேட்டதற்கு, அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவே மின்னஞ்சல் வழியே அனுப்பலாம் என்றும் கூறி அதற்கான முகவரியை வழங்கியுள்ளனர். அவர் விடுபட்ட ஆவணங்களை அனுப்பிய பத்தாவது நாளிலேயே அவருக்கான கட்டிட ஒப்புதல் எவ்வித லஞ்சமுமின்றி கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
ஆக மொத்தம் மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரே வருடத்தில் பெரிய வித்தியாசத்தை பார்க்கலாம்.. ஐந்து வருடங்களில் ஒரு புதிய தமிழகத்தை பார்க்கலாம்.. தொடர்ச்சியாக 10 முதல் 20 வருடங்கள் இதேபோல் நடந்தால் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
