தமிழக அரசியல் களம் தற்போது ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தால் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, டெல்லியில் இன்று காங்கிரஸ் மேலிடம் கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரம் இல்லாமல் தவிக்கும் திமுக, வரும் 2026 சட்டமன்ற தேர்தலைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. ஆனால், எங்களால் வெறும் கட்சி மட்டும் நடத்த முடியாது” என்று வெளிப்படையாக பேசும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை அமைச்சரவையில் இடம்பிடிக்காமல் பின்வாங்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இது திமுகவிற்கு விடப்பட்ட நேரடி மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த உரசல்களுக்கு மத்தியில், “எங்களை விட்டு பிரிந்தால், அந்த 40 எம்பி தொகுதிகளையும் பாஜக கூட்டணிக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கும்” என்ற மறைமுக எச்சரிக்கையை திமுக தரப்பு காங்கிரஸிற்கு விடுப்பதாக தெரிகிறது. அதாவது, காங்கிரஸ் கூட்டணியை முறித்தால், திமுக தனது பலத்தை நிரூபிக்க தேசிய அளவில் புதிய வியூகங்களை வகுக்கும். இதில் ஒரு அதிரடி திருப்பமாக, 2029 மக்களவை தேர்தலில் திமுக பாஜகவுடன் கைகோர்க்குமா என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. 1999-ல் வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த வரலாற்றை கொண்ட திமுக, தனது ‘நேஷனல் ஆம்பிஷனை’ நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை டெல்லியை நோக்கித்தன் பார்வையை திருப்ப வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் மேலிடத்தை சந்திக்கச் சென்றுள்ள மாணிக்கம் தாக்கூர் போன்ற தலைவர்கள், “தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என்று ஒற்றை காலில் நிற்கின்றனர். நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ காங்கிரஸிற்கு ஒரு மாற்று தெரிவாக தென்படுவதால், அதை ஒரு பேரம் பேசும் கருவியாக காங்கிரஸ் பயன்படுத்துகிறது. ஆனால், “எங்கள் கோட்டையில் யாருக்கும் பங்கு தரமாட்டோம்” என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் தீர்க்கமாக இருக்கிறார். இவ்வளவு பிடிவாதமாக இருக்கும் திமுகவை வழிக்கு கொண்டுவர, காங்கிரஸ் வெளியேறினால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும் என்பதை திமுக நன்கு அறியும்.
அதே சமயம், திமுகவின் இந்த மிரட்டல் தொனி காங்கிரஸை கட்டுப்படுத்துமா அல்லது கலகம் செய்ய வைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி. 15 ஆண்டுகளாக அதிகார பசி கொண்ட தொண்டர்களை திருப்திப்படுத்த முடியாமல் தவிக்கும் காங்கிரஸ், இம்முறை பிடிவாதம் பிடித்தால் கூட்டணி உடைய வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒருவேளை கூட்டணி முறிந்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்ற கூட்டணி கட்சிகளுடன் களம் காணும். அதன் தொடர்ச்சியாக, 2029-ல் மத்தியில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க திமுக பாஜகவை நோக்கி நகர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது திராவிட அரசியலின் அடிப்படை தத்துவத்திற்கே சவாலாக அமையும் என்றாலும், அதிகாரம் என்ற இலக்கிற்காக அரசியல் கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு தமிழக வரலாறு பலமுறை சாட்சியாக இருந்துள்ளது.
பாஜகவும் திமுகவை நோக்கி தனது கரங்களை நீட்ட தயாராகவே உள்ளது. 2024-ல் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வரும் 2029-ல் திமுக போன்ற ஒரு வலுவான பிராந்திய கட்சியின் ஆதரவு பாஜகவிற்கு தேவைப்படலாம். “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி” என்ற பிம்பத்தை உடைக்க ஸ்டாலின் எடுத்து வரும் இமேஜ் ரீபில்டிங் முயற்சிகள், நாளை பாஜகவுடன் இணைவதற்கான அஸ்திவாரமாகக்கூட இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இதனால், காங்கிரஸிற்கு இப்போது இரண்டு வழிகளே உள்ளன: ஒன்று, திமுக சொல்லும் இடங்களை பெற்றுக்கொண்டு அமைதியாக இருப்பது; அல்லது, கூட்டணியை முறித்து கொண்டு புதிய அரசியலை தொடங்குவது.
இறுதியாக, தமிழக அரசியலில் ‘பிரண்ட்லி மேட்ச்’ என்ற காலம் முடிந்து, ‘பவர் மேட்ச்’ தொடங்கிவிட்டது. திமுகவின் மிரட்டலும், காங்கிரஸின் அதிகார பசியும் ஒரு முச்சந்தியில் வந்து நிற்கின்றன. இன்று டெல்லியில் ராகுல் காந்தி எடுக்கும் முடிவு, 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமல்ல, 2029 நாட்டின் தலைவிதியையும் தீர்மானிக்க போகிறது. ஒருவேளை திமுக தனது 15 ஆண்டு கால அதிகார ஏக்கத்தை போக்கிக்கொள்ள ஒரு மாற்று பாதையை தேர்ந்தெடுத்தால், அது தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். காங்கிரஸை விட்டு பிரிவது என்பது திமுகவிற்கு ஒரு தற்காலிக இழப்பாக தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் டெல்லியில் ஆளுமை செலுத்துவதற்கான ஒரு ராஜதந்திர நகர்வாகவே அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
