தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரும் மாற்றத்தை முன்னெடுக்க தயாராகி வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தற்போது தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை பிரதான இலக்காக கொண்டு செயல்படும் அவர், கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ள புதிய அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெற்றியை தீர்மானிக்கும் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு மிக தெளிவான காலக்கெடுவையும் இலக்கையும் நிர்ணயித்துள்ளார். இனிமேல் நமக்கு ஆடம்பரமான பொதுக்கூட்டங்களோ அல்லது பொதுக்குழு போன்ற ஆரவாரமான நிகழ்ச்சிகளோ தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜனவரி 18-ஆம் தேதி வரை நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி ஒன்றுதான் உள்ளது என்றும், அது வாக்காளர் பட்டியல் திருத்த பணி மட்டுமே என்றும் மிக கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நபரின் ஓட்டு கூட விடுபட கூடாது என்பதில் விஜய் மிகுந்த அக்கறை காட்டுகிறார். குறிப்பாக, தவெக-வின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்களை உடனடியாக சேர்க்கும் பணியில் ஆன்லைனில் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து அநியாயமாக நீக்கப்பட்ட பெயர்களை கண்டறிந்து அவற்றை மீண்டும் சேர்க்கும் பணியை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு நவீன பாணியில் களமிறங்க உள்ளனர். சாதாரணமாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், லேப்டாப் மற்றும் இணைய வசதியுடன் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று பெயர் நீக்கப்பட்டிருந்தால், உடனே ஆன்லைனில் அவர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இது மற்ற அரசியல் கட்சிகளிடையே ஒருவித வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த களப்பணியில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் உடனடியாக விண்ணப்பிப்பது, முகவரி மாற்றம் அல்லது பெயர் பிழைகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடித்தட்டு மக்களை நேரடியாக சென்றடைய விஜய் எடுக்கும் இந்த முயற்சி, அரசியலில் ஒரு புதுமையான அணுகுமுறையாக பார்க்கப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அரசியல் களத்தில் வெற்றிபெற வெறும் மக்கள் செல்வாக்கு மட்டும் போதாது, அது முறையாக வாக்குகளாக பதிவாக வேண்டும் என்பதில் விஜய் மிக தெளிவாக இருக்கிறார். தேர்தல் ஆணையம் ஜனவரி 18 வரை அவகாசம் வழங்கியுள்ளதால், அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கொள்ள தவெக முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
