தமிழக அரசியலில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயர் ஒரு காலத்தில் விசுவாசத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நிழலாகவும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் வலம் வந்த ஓபிஎஸ்-இன் அரசியல் பயணம், பல ஏற்றத்தாழ்வுகளை கடந்து இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள், தர்மயுத்தம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல்கள் என அடுத்தடுத்த அரசியல் நெருக்கடிகள் அவரை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளன. இந்த சூழலில், பாஜகவின் புறக்கணிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தை மீட்டெடுக்க ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
விசுவாசத்தின் அடையாளம்: அ.தி.மு.க.வின் உச்சம் வரை
ஓபிஎஸ், அ.தி.மு.க.வின் கீழ்நிலை பதவிகளில் இருந்து படிப்படியாக முன்னேறி, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானபோதே எதிர்பாராதவிதமாக தமிழக முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டபோது, அவரது முழு நம்பிக்கையை பெற்று, முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மீதான விசுவாசத்தை ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுத்தியவர் ஓபிஎஸ். அவர் முதலமைச்சராக இருந்தபோதும், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவருக்கும் விசுவாசமாக செயல்பட்டார்.
ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலைகள் வந்தபோதெல்லாம், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்ததும் அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்கள். இது அ.தி.மு.க.வில் அவரது தனித்துவமான இடத்தையும், ஜெயலலிதாவின் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.
தர்மயுத்தமும் வீழ்ச்சியின் தொடக்கமும்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, சசிகலா முதலமைச்சர் பதவியை ஏற்க முற்பட்டபோதுதான் ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்வு ஒரு திருப்புமுனையை சந்தித்தது. ‘தர்மயுத்தம்’ என்று பெயரிடப்பட்ட அந்த போராட்டம், சசிகலாவின் தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் எழுப்பிய உரிமைக்குரலாக ஒலித்தது. ஆனால், இதுவே அவரது அரசியல் வீழ்ச்சிக்கு அடிகோலியது எனலாம்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்த பின்னர், ஓபிஎஸ் கட்சியில் ‘செல்லாக் காசாக’ மாறினார். கிட்டத்தட்ட கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும், ஒருசில அரசியல்வாதிகளின் தலையீடு அல்லது வேறு சில காரணங்களால், எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஏற்பட்டு, அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை உருவானது. ஈபிஎஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
ஈபிஎஸ்-உடனான மோதலும் தனிமைப்படுத்தலும்
இரட்டை தலைமை நீண்டகாலம் நீடிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்ததால், மீண்டும் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். எனினும், அப்போதும் ஓபிஎஸ் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாகவே இருந்தார். ‘அ.தி.மு.க.வை மீட்போம்’ என்று உரிமைக்குரல் எழுப்பி, கட்சிக்காகப்போராடினார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த மூவரும் இணைந்து ஒரு அணியாக செயல்படுவார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய ஒரு கூட்டணி அமையவில்லை.
பாஜகவின் புறக்கணிப்பு மற்றும் புதிய சவால்
இந்த சூழலில், ஓபிஎஸ் தனது அரசியல் எதிர்காலத்திற்காக பாஜகவை நம்பியிருந்தார். மத்திய அரசின் ஆதரவும், பாஜகவின் அரசியல் சக்தியும் தனக்கு உதவும் என்று அவர் நம்பினார். ஆனால், அண்மையில் நடந்த நிகழ்வுகள், பாஜக ஓபிஎஸ்-ஐ கைவிட்டுவிட்டதையே காட்டுகின்றன. பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படாதது, பாஜக ஈபிஎஸ்-ஐ முழுமையாக ஆதரிப்பதைக் காட்டுகிறது. இது ஓபிஎஸ்-ஐ மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ்-க்கு தனது அரசியல் பலத்தையும், இருப்பையும் நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழல் உருவாகியுள்ளது. தன்னை அவமதித்த அ.தி.மு.க.வுக்கும், நம்பியிருந்தும் கைவிட்ட பாஜகவுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் கூட்டணி: ஒரு சாத்தியமான வழி?
இந்த இக்கட்டான சூழலில், ஓபிஎஸ்-க்கு உள்ள ஒரு முக்கியமான மற்றும் சாத்தியமான வழி, நடிகர் விஜய் தொடங்கவிருக்கும் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து செயல்படுவதுதான் என்ற பேச்சு வலுத்துள்ளது.
ஓபிஎஸ்-க்கு என்ன கிடைக்கும்?:
விஜய்யின் கட்சியில் இணைவதன் மூலமோ அல்லது ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலமோ ஓபிஎஸ் தனது அரசியல் இருப்பை மீட்டெடுக்க முடியும். விஜய்யின் அரசியல் அறிமுகத்திற்கு, ஓபிஎஸ் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியின் தேவை இருக்கலாம். இது ஓபிஎஸ்-க்கு ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்க உதவும். இந்த கூட்டணி வெற்றி பெற்றால், ஓபிஎஸ்-இன் அரசியல் செல்வாக்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும்.
விஜய்க்கு என்ன கிடைக்கும்?:
புதிதாக அரசியல் களம் காணும் விஜய்க்கு, ஓபிஎஸ்-இன் அரசியல் அனுபவம், முன்னாள் முதலமைச்சர் என்ற பிம்பம், அ.தி.மு.க.வின் ஒரு பிரிவு தொண்டர்களின் ஆதரவு, ஓபிஎஸ் சார்ந்த சமூக ஆதரவு, தென்மாவட்டங்களில் அவருக்கு உள்ள செல்வாக்கு ஆகியவை பேருதவியாக இருக்கும். தமிழக அரசியலின் நுணுக்கங்களை அறிந்த ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் விஜய்க்கு தேவை என்ற இடத்தை ஓபிஎஸ் நிரப்ப முடியும்.
மொத்தத்தில், ஓபிஎஸ் அவர்களுக்கு இது ஒரு சரியான நேரம். விஜய்யுடன் இணைந்து அவர் தனது அரசியல் திறனையும், செல்வாக்கையும் அ.தி.மு.க.வுக்கும், பாஜகவுக்கும் நிரூபித்தால், அவருக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் உருவாக வாய்ப்புள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் அணி உருவாவதற்கும் வழிவகுக்கலாம். ஆனால் ஓபிஎஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
