மலேசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு கோவில், உலகின் முதல் “ஏ.ஐ. கடல் தேவதை சிலையை அறிமுகப்படுத்தி உலகின் முதல் ஏ.ஐ. கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. Mazu என்று அழைக்கப்படும் இந்த கடவுள், பக்தர்களுடன் பேசி கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு டிஜிட்டல் வடிவ கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் தெற்கு பகுதியான ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோவில், சமீபத்தில் பக்தர்கள் இந்த ஏ.ஐ. Mazu உடன் உரையாடும் காணொளியை வெளியிட்டது. திரையில் காணப்படும் Mazu பாரம்பரிய சீன உடை அணிந்த அழகான பெண் வடிவில் காணப்பட்டார்.
பக்தர்கள், இந்த ஏ.ஐ. கடவுளிடம் ஆசீர்வாதங்களை கேட்டுக்கொள்ளலாம், தங்களுக்கான பிரச்சனைகளை விளக்கி அதற்குரிய தீர்வுகளை கேட்டறியலாம், மற்றும் தனிப்பட்ட சந்தேகங்களுக்கு பதில்கள் பெறலாம் என்று கோவில் தெரிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் Mazu சிலையை மலேசியாவின் Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் தனிப்பட்ட நபர்களுக்கான ஏ.ஐ. கிளோனிங் சேவைகளும் வழங்குகிறது.
ஒரு டெமோ காணொளியில், நிறுவனர் ஷின் காங், ஏ.ஐ. கடவுளிடம் “எதிர்பாராத செல்வத்திற்காக நான் அதிர்ஷ்டம் பெற முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பதிலாக அமைதியான இனிமையான குரலில் Mazu பதிலளித்து, “நீங்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்பாராத செல்வத்திற்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்,” என்று கூறினார்.
மேலும் ஒருவர் தனக்கு இரவில் நன்றாக தூங்க முடியாமல் இருப்பதாக கூறி அதற்கு வழிகாட்டுமாறு கேட்டார். அதற்கு Mazu “என் குழந்தையே,” என்று அழைத்து, “தூங்குவதற்கு முன் வெந்நீர் குடிக்கவும்,” என்று அன்புடன் அறிவுரை கூறினார்.
இந்த காணொளியை கோவில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகு, பலரும் பிரார்த்தனை கையெழுத்து இமோஜிகளுடன் ஆசீர்வாதங்களை கேட்டுக் கொண்டனர்.
கடல் கடவுளான Mazuவின் 1,065வது பிறந்த நாளான ஏப்ரல் 20ல் இந்த சிலை வைக்கப்பட்டு அதற்கான கொண்டாட்டமும் நடந்தது.
Mazu 960 ஆம் ஆண்டு சீனாவின் புடியான் பகுதியிலுள்ள மேசோ தீவில் ‘லின் மோ’ என்ற சாதாரண மனிதராக பிறந்தார். கப்பல் விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சிக்கும்போது உயிரிழந்த அவர், வானத்திற்கு ஏறி கடல் பயணிகளை காக்கும் சக்திவாய்ந்த கடவுளாக போற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்றும் Mazu மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சீன சமூகத்தினரால் பக்தியுடன் வழிபடப்படுகிறார்.