சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ எனப்படும் பிரபலங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. இனிமேல், அவர்கள் ஏதேனும் ஒரு பொருளை விளம்பரம் செய்தால், அதற்கு பணம் பெற்றார்களா, அல்லது வேறு சலுகை கிடைத்ததா என்பதைப்பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பல லட்சம் ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பல பிராண்டுகளிடமிருந்து பணம் அல்லது இலவச பொருட்களை பெற்றுக்கொண்டு, அவற்றை தங்களது பக்கங்களில் விளம்பரம் செய்வது வழக்கம். ஏற்கெனவே, இலவசமாக பெறும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையும் நுழைய வாய்ப்புள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிரபலங்கள் கார், மொபைல், உடைகள், அழகுசாதன பொருட்கள் போன்ற ஒரு தயாரிப்பை பெற்று அதைத் தங்களிடமே வைத்துக்கொண்டால், புதிய வரி விதிகளின் கீழ் 10% TDS செலுத்த வேண்டும். ஆனால், ஒரு பொருளை பயன்படுத்திவிட்டு, அதை மீண்டும் நிறுவனத்திடம் திருப்பி அனுப்பினால், அதற்கு TDS பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, சமூக ஊடகப் பிரபலங்கள் பணம் பெற்று எந்தவொரு பிராண்டையும் விளம்பரப்படுத்தினால், அந்த பிராண்டுடன் தங்களுக்குள்ள தொடர்பை தெளிவாக அறிவிக்க வேண்டும். அதாவது, விளம்பர பதிவுகளில் “இது விளம்பரம்” அல்லது “பணம் பெற்றுக்கொண்டு விளம்பரப்படுத்தப்பட்டது” என்பது போன்ற துறப்பு சான்றுகளை கட்டாயம் இட வேண்டும். இதன் மூலம், பார்வையாளர்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெளிவாக தெரியும்.
இந்த வழிகாட்டுதல்கள் அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களில் உள்ள முக்கிய அம்சங்கள்:
பணம் பெற்ற விளம்பரங்களுக்கு துறப்பு சான்று (disclaimer) கட்டாயம்.
சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
விதிமுறைகளை மீறினால், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
முதல்முறை மீறலுக்கு ரூ.10 லட்சம் அபராதம், இரண்டாம் முறைக்கு ரூ.20 லட்சம், தொடர்ந்து மீறினால் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த விதிமுறைகள், பிரபலங்கள் தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்கு பணம் பெறும்போது, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதன் மூலம், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் ஒரு தெளிவை ஏற்படுத்தும்.