ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்று கூறப்படும் நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு 21 ஆயிரம் ரூபாய் சம்பளம் சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால் எனக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும் இது மிகவும் மோசமானது என்றும் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது சம்பளம் 21,000 ரூபாய். ஆனால் மாத செலவு 30 ஆயிரம் ரூபாய், 2019 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக இந்த சம்பளத்தை தான் நான் பெற்று வருகிறேன் என்று கூறியுள்ள நிலையில் அவரது ட்வீட்டிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு நபர் தான் பெங்களூரில் வேலை பார்ப்பதாகவும், 2019ஆம் ஆண்டு முதல் தனக்கு வெறும் 25 ஆயிரம் சம்பளம் வருவதாகவும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக அதே சம்பளத்தில் தான் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் டெக் மகேந்திரா நிறுவனம் தனக்கு சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஏராளமான நபர்கள் இந்த பதிவுக்கு கமெண்ட் பதிவு செய்கின்றனர். சிலர் வருஷகணக்கில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாகவும் பெரிய பெரிய நிறுவனங்களே சம்பளத்தை அதிகரிக்கவில்லை என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஒரு சில நிறுவனங்கள் சம்பளத்தை கூட சரியாக உரிய நேரத்தில் கொடுப்பதில்லை என்றும் பல நிறுவனங்கள் ஒரு மாதம் இரண்டு மாதங்கள் பென்டிங் வைத்துதான் சம்பளத்தை வழங்கி வருகின்றன என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
எனவே ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதில்லை என்றும் அதில் பல ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இந்த செய்தியின் மூலம் தெரிய வருகிறது.