சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடத்திற்குப் பின் சூர்யா நடிக்கும் படமாதலால் கங்குவா படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. மேலும் மிகுந்த பொருட் செலவிலும், வரலாற்று பின்னனிக் கதையை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் அதிக சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.
அண்ணாத்த படத்திற்குப்பிறகு இயக்குநர் சிவா இயக்கும் படம் இது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். ஏற்கனவே தேவி ஸ்ரீபிரசாத், சூர்யா கூட்டணியில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. சூர்யாவின் 43-வது படமாக உருவாகியிருக்கும் இதில் அவருடன் திஷா பதானி, பாலிவுட் நடிகர் பாபி தியோல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில் சூர்யா ரசிகர்கள் டிரைலரைக் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக சூர்யா பேசும் வசனங்களான உன் இரத்தமும், என் இரத்தமும் வெவ்வேறா.. என கண்களில் அனல் தெறிக்க பேசும் வசனமும், பாபி தியோலின் விருந்து அருந்த வாரீரோ.. என மிரட்டும் வசனமும் படத்தின் மீதான சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. 10 இந்திய மொழிகளில் படம் வெளியாவதால் படத்தின் விளம்பரத்திற்கே அதிக பட்ஜெட் எடுத்திருக்கும். இதுமட்டுமன்றி படம் முழுக்க வரலாற்றுக் கதையாதாலால் ஏராளமான பொருட்செலவும், நடிகர்களும் நிறைந்திருக்கின்றனர்.
இதுவரை சூர்யா நடித்துள்ள படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாக கங்குவா உருவாகியிருப்பதால் ஒட்டு மொத்த திரையுலகமும் கங்குவா படத்திற்கு காத்திருக்கிறது. வருகிற 10.10.2024 தசரா பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகிறது. மேலும் ஏற்கனவே ஆதி நெருப்பே பாடலின் கிளிம்ஸ் வெளியாகி வைரலாகி இருக்கும் நிலையில் இன்று இயக்குநர் சிவாவின் பிறந்தநாளையொட்டி தற்போது டிரைலரும் வெளிவந்துள்ளது.
எனினும் டிரைலரில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளே காட்டப்பட்டுள்ளது. பெண் நடிகர்கள் யாரும் டிரைலரில் இடம்பெறவில்லை. டிரைலரின் கடைசியில் முதலையை துவம்சம் செய்து சூர்யா வெளியே வரும் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களுக்கு உண்மையாகவே புல்லரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் டிரைலரில் கடைசியில் மண்டை ஓடுகளை வைத்துக் கொண்டு போவது கார்த்தியா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.