இந்த தடவை எத்தனை வலிமையான கூட்டணி அமைத்தாலும் வேஸ்ட்.. மக்களிடம் இருக்கும் கேள்விகள் இவை தான்.. ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? எடப்பாடி பழனிசாமி வேண்டுமா? வேண்டாமா? விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாமா? வேண்டாமா? இந்த மூன்றில் தான் தேர்தல் முடிவு இருக்குது.. கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் இம்முறை வெற்றிக்கு உதவாது.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மும்முனை போட்டி உருவாகியுள்ளது. இந்தத்தேர்தலில் வெற்றி என்பது வெறும் கூட்டணி…

vijay eps stalin

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மும்முனை போட்டி உருவாகியுள்ளது. இந்தத்தேர்தலில் வெற்றி என்பது வெறும் கூட்டணி கணக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்பட போவதில்லை என்றும், மாறாக மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு இடையிலான தனிப்பட்ட செல்வாக்கே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய மூவரை சுற்றியே இந்த தேர்தல் சுழலப் போகிறது. இந்த மூவரில் யார் மாநிலத்தை ஆளவேண்டும் என்ற கேள்வி மட்டுமே மக்கள் மத்தியில் இருக்கும்.. எந்த கூட்டணியில் எந்த கட்சி இருக்கும் என்பது மக்களின் பார்வையாக இருக்காது.

முதல் கேள்வி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டுமா? என்பதுதான். திமுக தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக திறன் மீதான மதிப்பீடாக இது இருக்கும். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை தாண்டி, ஸ்டாலின் தனது வாக்கு வங்கியை தக்கவைப்பாரா என்பதே பலரது எதிர்பார்ப்பு. கடந்த தேர்தல்களில் திமுகவின் கூட்டணி கட்சிகள் வழங்கிய 5 முதல் 10 சதவீத வாக்குகள் வெற்றியை தீர்மானித்தன. ஆனால், இம்முறை மக்கள் “ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி திருப்தியா?” என்ற ஒற்றை கேள்வியின் அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது கேள்வி, பிரதான எதிர்க்கட்சி தலைவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மீதானது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை ஒற்றுமையாக வழிநடத்தி செல்லும் ஈபிஎஸ்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா? என்று மக்கள் சிந்திப்பார்கள். குறிப்பாக, கடந்த தேர்தல்களில் இழந்த அதிகாரத்தை மீட்க அதிமுக பல்வேறு கூட்டணிக் கணக்குகளை போட்டாலும், “எடப்பாடி பழனிசாமி ஒரு மாற்று தலைமையா?” என்ற மக்களின் பார்வையில் தான் அவரது வெற்றி அடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளின் பலத்தை விட, அதிமுகவின் சொந்த வாக்கு வங்கி மற்றும் இபிஎஸ்-ன் ஆளுமை இம்முறை பெரும் சோதனையை சந்திக்கும்.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமான கேள்வி, அரசியலில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய் குறித்ததாகும். பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா? என்பதுதான் இளைய தலைமுறை மற்றும் நடுநிலை வாக்காளர்களின் தற்போதைய விவாதம். விஜய்யின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவரது ‘நேரடிப் போட்டி’ அறிவிப்பு ஆகியவை அரசியலில் ஒரு புதிய அச்சை உருவாக்கியுள்ளன. “விஜய் இன்னொரு சீமானாக சுருங்குவாரா அல்லது ஆட்சியை பிடிக்கும் அசுர பலம் பெறுவாரா?” என்பது அவர் மீதான மக்களின் நம்பிக்கையை பொறுத்தே அமையும்.

அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இம்முறை கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் என்பது இரண்டாம் பட்சமே. பொதுவாக தமிழகத்தில் சிறிய கட்சிகள் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருந்தாலும், அது ஒரு பெரிய கட்சியின் வெற்றியை உறுதி செய்ய உதவும். ஆனால், 2026 தேர்தலில் மக்கள் கட்சிகளை தாண்டி தலைவர்களை பார்க்க தொடங்கிவிட்டனர். இதனால், பலவீனமான கூட்டணி அமைந்தாலும் வலுவான தலைவர் இருந்தால் மக்கள் அந்த பக்கமே சாய வாய்ப்புள்ளது. இது சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒரு பின்னடைவாக அமையலாம் அல்லது அவை பெரிய கட்சிகளின் நிழலில் மறைந்து போகலாம்.

இறுதியாக, 2026 தேர்தல் என்பது ஒரு தார்மீக போராட்டமாக மாறப்போகிறது. “ஸ்டாலின் வேண்டுமா? ஈபிஎஸ் வேண்டுமா? அல்லது விஜய் வேண்டுமா?” என்ற இந்த மும்முனை சவாலில் யார் மக்களின் இதயங்களை வெல்கிறார்களோ அவர்களுக்கே அரியணை சொந்தமாகும். பழைய கூட்டணி கணக்குகள் தவிடுபொடியாகும் இந்த தேர்தலில், ஆளுமை போட்டியே பிரதானமாக இருக்கும். தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது திராவிட கோட்டையிலேயே மீண்டும் முடிவுகள் அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.