தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் SETC பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.
இதேபோல் தமிழகம் முழுக்க சுமார் 3500 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. தொலைதூரப் பயணங்களுக்கு ரயில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடுவதால் பெரும்பாலான மக்கள் நாடுவது ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகளைத் தான்.
SETC பேருந்துகளில் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களுர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விழாக்காலங்களில் அனைத்து பேருந்துகளிலும் புக்கிங் முடிந்து விடும். ஆனால் சாதாரணமாக 60 நாட்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிடலாம். இந்நிலையில் SETC சூப்பர் அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளது.
விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு.. இரண்டையும் எடுக்க வேண்டுமா?
இனி பயணிகள் முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாட்களிலிருந்து 90 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு முன்பே SETC பேருந்துகளில் செல்ல விரும்புவோர் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இதுமட்டுமன்றி ஏற்கனவே அரசுப் பேருந்துகளில் ஜனவரி 20 வரை முன்பதிவு செய்வர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருசக்கர வாகனம், எல்இடி டிவி, பிரிட்ஜ் போன்ற பரிசுகளையும் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.
அதேபோல் ரிட்டன் டிக்கெட்டும் புக் செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை ஏற்கனவே அமலில் உள்ளது. இப்படி பயணிகளைக் கவர அரசு போக்குவரத்துக் கழகம் அடுத்தடுத்து பல சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் SETC பேருந்துகளுக்கான் டிக்கெட்டுகளை 90 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யலாம்