காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். பாதுகாப்பு, பதிலடி நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் இந்த சந்திப்பின் மையமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். RSS வட்டாரங்கள் இதுகுறித்து கூறியபோது, ‘இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது தான், ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அது முக்கியத்துவம் பெற்றது என்றும் கூறுகின்றன. முக்கியமாக, காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் எதிர்வினை நடவடிக்கைகள் பற்றியே விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தலைவர் அனில் சவுகான், இராணுவ, கடற்படை, விமானப்படை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமீப காலத்தில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்த கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் சந்திப்பாக அமைந்தது.
இந்நிலையில் RSS மூத்த நிர்வாகி ஒருவர், “இத்தகைய சந்திப்புகள் அபூர்வமாக நடக்கும். ஆனால், சில நேரங்களில் நடைமுறை விதிகளை புறக்கணித்து தேசிய நலனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது அத்தகைய ஒரு சந்திப்புதான்” என்றார். மேலும், “பாதுகாப்பு துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் தேவை” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு, பாதுகாப்பு துறையில் பல மாற்றங்களை உருவாக்கும் என கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் நாடு தற்போது இருக்கிறது.