மும்பை : உலகின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா இயல்பாகவே இளகிய மனம் கொண்ட மனித நேயர். இன்று உலகின் டாப் 10 பணக்கார்களில் ஒருவராக இருக்க வேண்டிய ரத்தன் டாடா ஆனால் அதில் இடம்பெறவில்லை.
பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த போதிலும் தனது வருமானத்தில் பெரும் பங்குத் தொகையை அவர் சமூக சேவைக்காகவே செலவழிக்கிறார். எனவே அதானி, அம்பானி, பில்கேட்ஸ், எலான் மாஸ்க், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோரே உலகின் மிகப்பெரும் பணக்கார்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.
இப்படிச் சிறந்த மனிதநேயம் மிக்க மனிதராகத் திகழும் ரத்தன் டாடா சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கிறார். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய் ஒன்றிற்காக உதவி கேட்டு போட்ட புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. அதில் உங்களது மேலான உதவியை வரவேற்கிறேன்.
மும்பை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள 7 மாத வயதுடைய நாய்க்கு இரத்தம் தேவைப்படுகிறது. இது அனீமியா நோயால் பாதிக்கப்பட்டு காய்ச்சலுடன் உள்ளது.
எனவே மும்பை வாசிகளே அவரசமாக இந்த நாய்க்கு யாராவது உதவ முடியுமா என்று கேட்டு அந்த நாய்க்குத் தேவைப்படும் விபரங்களையும் அளித்துள்ளார். அதில் இரத்தம் கொடுக்கப்படும் நாயின் வயது 8 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 25 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதமாக எந்த உடல் நல உபாதைகளுக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் வைத்துள்ளார்.
இந்தப் பதிவைப் போட்டசில மணி நேரங்களிலேயே சுமார் 6 இலட்சம் லைக்குள் பெற்றது. எனினும் சில மணி நேரங்களில் இந்தக் கோரிக்கை முடித்து வைக்கப்பட்டது என்றும் அவர் எடிட் செய்து பதிவிட்டிருந்தார். ரத்தன் டாடா டிரஸ்ட் கால்நடை மருத்துவமனை மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.