இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ரயில் ஓட்டுநர்களுக்கு பல மணி நேரம் தொடர்ச்சியான வேலை செய்யும்போது கழிவறை மற்றும் உணவு இடைவேளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த நிலையில் , “இது செயல்பாட்டு முறையில் சாத்தியமில்லை” என்று கூறி மறுத்துள்ளது.
ரயில்வே துறையின் முடிவு சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதை மனிதாபிமானமற்றது என கூறி, இந்திய ரயில்வே அடிப்படை மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். பலர் இந்த முடிவை “விசித்திரம்”, “கொடூரம்” எனக் குறிப்பிடும் போது, ரயில் ஓட்டுநர்களுக்கு நியாயமான ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
ஓய்வு நேரம் மறுக்கப்படும் நிலையில் ரயில் ஓட்டுநர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதையும் குறிப்பிட்ட நெட்டிசன்கள், இது ஒரு மனித உரிமை பிரச்சினையாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். மேலும், சமீபத்தில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகளும் இதுவும் ஒரு காரணம் என்று பலர் கூறுகின்றனர். ஓய்வின்றி வேலை செய்பவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் லோகோ பைலட்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர், “ஒவ்வொரு பயணத்திற்கும் இரு லோகோ பைலட்களை நியமிப்பது தான் ஆக்கபூர்வமானது. உணவு அல்லது கழிப்பறை இடைவேளையை வழங்காமல் இருப்பது முற்றிலும் தவறானது.”
மற்றொருவர் “இது வேடிக்கையானது. ஒரு லோகோ பைலட்டுக்கு கழிப்பறை செல்லவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் அவர் என்ன செய்வார்? பசியாக இருந்தாலும் அவர் அப்படியே தனது வேலையை தொடர வேண்டுமா? இது என்ன வித்தியாசமான முடிவு?”
இன்னொரு நெட்டிசன், ‘இந்த முடிவு, நாடு மிகப்பெரிய ரயில் விபத்துகளின் எண்ணிக்கையில் உயர்வை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில் எடுக்கப்படுகிறது. அதிலும் பல விபத்துகள் மனித பிழையால் ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது. இது மிக முக்கியமான பிரச்சினை, இதை ஏற்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து தற்போது வரை இந்திய ரயில்வே எந்த புதிய அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.