தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ காங்கிரஸை வளைக்க முயற்சிப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் வெறும் ‘மிரட்டல் அரசியல்’தானா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இறுதியில், வெறும் 3 தொகுதிகளை கூடுதலாக பெற்றுக்கொண்டு மீண்டும் திமுகவின் காலடியில் காங்கிரஸ் தஞ்சமடைந்தது, “பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற பழமொழியை தான் நினைவுபடுத்துகிறது.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடம் தொடக்கத்தில் காட்டிய வேகம், திமுகவை ஒரு வழி செய்துவிடும் என்று அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் நம்பினர். விஜய்யை காட்டி திமுகவை மிரட்டியதன் மூலம், ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்று கனவு கண்ட கதையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. 3 கூடுதல் தொகுதிகளுக்காக இவ்வளவு பில்டப் கொடுத்த ராகுல் காந்தி, இறுதியில் ஸ்டாலினின் பிடிவாதத்திற்கு முன்னால் பணிந்தது, அக்கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சொதப்பல் முடிவால், காங்கிரஸ் தனது சுயமரியாதையை மீண்டும் ஒருமுறை அடகு வைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
உண்மையில், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் திமுக தொண்டர்கள் மனப்பூர்வமாக வேலை செய்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏற்கனவே தொகுதிகளை பிரிப்பதில் ஏற்பட்ட இழுபறியால் திமுகவின் உள்ளூர் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். “நாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த தொகுதியை காங்கிரஸிற்கு தாரை வார்ப்பதா?” என்ற கோபம் திமுகவினர் மத்தியில் உள்ளது. இதனால், காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் உள்ளடி வேலைகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. 2011-ல் 63 இடங்களில் நின்று 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதற்கு திமுகவின் உள்ளடி தான் காரணம் என்று கூறப்பட்டது. இதே நிலை 2026ல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதுய்.
ராகுல் காந்தியின் இத்தகைய முடிவுகள் தான் தேசிய அளவில் பாஜகவின் வெற்றிக்கு மறைமுக காரணமாக அமைகின்றன. ஒரு வலுவான கூட்டணியை வழிநடத்தவோ அல்லது தனது கூட்டணி கட்சிகளிடம் கறாராக பேசி உரிமைகளை பெறவோ தெரியாத ராகுலின் பலவீனத்தை பாஜக மிக சரியாகப் பயன்படுத்தி கொள்கிறது. தமிழகத்தில் கூட, ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க வாய்ப்பிருந்தும், மீண்டும் ஒரு பிராந்திய கட்சியின் பிடியில் சிக்கிக்கொள்வது காங்கிரஸின் அழிவுப்பாதைக்கு இட்ட அஸ்திவாரமாகும். ராகுலின் இந்த ‘சரண்டர்’ அரசியல், அக்கட்சியின் வாக்கு வங்கியை மேலும் சரிப்பதை தவிர வேறொன்றையும் சாதிக்காது.
தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை விஜய் மிக துணிச்சலாக முன்வைத்தார். அது காங்கிரஸிற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக தெரிந்தது. ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு திமுகவை பணிய வைக்க தவறியது காங்கிரஸின் இயலாமையையே காட்டுகிறது. வெறும் 28 தொகுதிகளை வாங்கி கொண்டு, ஒரு மாநில கட்சியிடம் ஒரு தேசிய கட்சி ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு கெஞ்சியது என்பது அரசியலில் மிக கேவலமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வரும்போது, ராகுல் காந்தியின் இந்த தவறான கணக்கு அவருக்கு ஒரு கசப்பான பாடத்தை புகட்டும் என்பது நிச்சயம்.
இறுதியாக, 2026 தேர்தல் களம் என்பது திமுகவிற்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக மாறப்போகிறது. இதில் காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சியாகவே நீடிக்க முடிவு செய்திருப்பது வருத்தத்திற்குரியது. ராகுல் காந்தியின் இத்தகைய அரசியல் ‘சொதப்பல்கள்’ தொடரும் வரை, பாஜகவை வீழ்த்துவது என்பது காங்கிரஸிற்கு எட்டாக்கனியாகவே இருக்கும். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் வேளையில், பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் வியூகம், 2026-ல் காங்கிரஸிற்கு பெரும் சரிவையே தேடித்தரும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
