விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி மிக குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க அதிமுக தரப்பு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரி முதல்வர் பதவியை கூட விஜய்க்காக ரங்கசாமி விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார் என்றும், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால் போதுமான நிலை உருவாகியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என கூறப்படுவதால், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது விஜய் தமிழகத்தில் துணை முதல்வராக வருவாரா? அல்லது புதுச்சேரி முதல்வராக வருவாரா? என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன என அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி அரசியல் தெரியும் என்பதால், புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் மற்றும் ரங்கசாமி கட்சி இணைந்து போட்டியிடும் எனவும், இரு கட்சிகளும் 50 சதவீத இடங்களில் போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழகத்தில் புதுவையை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், 2026 தேர்தல் இதுவரை இல்லாத அளவில் ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என கூறப்படுகிறது.