ஜம்முவில் காஷ்மீரை சேர்ந்த ஒருவர், திருட்டு குற்றச்சாட்டின் பேரில் போலீசாரால் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில், அந்த இளைஞர் சட்டையின்றி, கைகள் கட்டப்பட்டு, கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, ஒரு போலீஸ் ஜீப்பின் பனட் மீது அமர்ந்தபடி அழைத்து செல்லப்படுகிறார்.
அந்த காணொளியில், அந்த இளைஞர் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதையும், சில காவலர்கள் உட்பட பலரும் அவரை சுற்றி ஆரவாரம் செய்வதையும், கோஷமிடுவதையும் காண முடிகிறது. வாகனம் நகரும்போது அவரது தலை குனிந்தபடியே இருந்தது, இது அந்த அவமானத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
குற்றம்சாட்டப்பட்டவர் பிடிபடும்போது போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தன்னிடமிருந்து ரூ.40,000 திருடப்பட்டதாக ஒரு உள்ளூர்வாசி இவரை அடையாளம் காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் இவரை எதிர்கொண்டபோது, அந்த இளைஞன் கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் விரட்டி சென்று அவரை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்ததை தொடர்ந்து, இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜம்மு போலீஸ் ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு எஸ்.எஸ்.பி. ஜோகிந்தர் சிங், “காவல்துறையினரின் இந்த செயல் தொழில் முறையற்றது, இது ஒரு ஒழுக்கமான படைப்பிரிவுக்கு பொருத்தமற்றது. இதற்கு கடுமையான துறைரீதியான நடவடிக்கை தேவை,” என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, SDPO சிட்டி நார்த், ஜம்முவிடம் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
திருடனாக இருந்தாலும் அவனும் மனிதன் தானே, ஒரு மனித தன்மையுடன் சட்டப்படி ஒரு திருடனை அழைத்துச் செல்ல வேண்டாமா? இதே ஊழல் திருட்டு செய்த அரசியல்வாதியை எந்த போலீசாவது இது மாதிரி செய்து அழைத்து செல்ல தைரியம் இருக்கிறதா? ஏழைகள் திருடினால் ஒரு சட்டம், பணக்காரர்கள் திருடினால் ஒரு சட்டமா? போலீஸ்காரர்கள் வர வர எல்லை மீறுகிறார்கள்’ என்று இந்த செயலுக்கு பல கமெண்ட்கள் குவிந்து வருகிறது