வேலை நீக்க நடவடிக்கையில் பொதுத்துறை வங்கிகள்.. எஸ்பிஐ தான் முதலிடம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

ஏற்கனவே உலகில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 11,154 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் முதல் வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி இருப்பதாகவும், இந்த வங்கி 3562 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பேங்க் ஆப் பரோடா 2,607 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக வேலை நீக்கம் செய்யப்படுபவர்கள்  அதிகளவில் உயர் பதவியில் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 94,977 பேர் உயர் பதவியில் இருந்த நிலையில் தற்போது 92,515 என குறைந்துவிட்டதாக தெரிகிறது. அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 23,827 உயர் பதவியில் உள்ள ஊழியர்கள் இருந்த நிலையில் தற்போது 22,781  ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இனி வரும் நாட்களிலும் பொதுத்துறை வங்கிகளில் வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவதை அடுத்து வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்கிறார்கள், டிஜிட்டல் முறையில் தான் அனைத்து பரிவர்த்தனைகள் நடக்கின்றது, அதனால் ஊழியர்கள் அதிக அளவு தேவைப்படவில்லை என வங்கி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சில செயல்பாடுகள் ஆப் லைனில் இருக்கும் நிலையில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் பல வங்கிகள் இருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் ஒரு ஊழியர் சராசரியாக 1000 முதல் 2000 வாடிக்கையாளர்களை கையாள வேண்டிய நிலைமை இருப்பதாகவும் ஆனால் தனியார் வங்கிகளில் 400 முதல் 500 வாடிக்கையாளர்களை மட்டுமே ஊழியர்கள் கையாளுகின்றனர் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags: bank, layoff, staffs