பிராவிடண்ட் பண்ட் தொகை எவ்வளவு இருக்கிறது? அதில் உள்ள விவரங்கள் என்ன? போன்றவைகளை தெரிந்து கொள்ள, அதிலிருந்து லோன் எடுக்க வேண்டும் என்றால் நாள்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இதுவரை இருந்தது என்பதும் தெரிந்தது.
ஆனால், தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை வந்த பிறகு, பிராவிடண்ட் பணம் குறித்து எளிமையான நடைமுறைகளை அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது பிராவிடண்ட் பண்ட் நிதி குறித்த தகவல்களை UPI மூலம் இனி பார்த்துக் கொள்ளலாம் என்றும், அது மட்டும் இன்றி அவசர தேவைக்கு ஒரு லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் செயலாளர் சுனிதா தாவுரா தெரிவித்துள்ளார்.
இந்த அம்சம் அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றும், பிராவிடண்ட் கணக்குகளை நேரடியாக UPI கணக்கில் இணைத்து, அவர்கள் தங்களது முழு விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பணம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தால் அதன் மூலமே கோரிக்கை வைக்கலாம் என்றும், இதன் மூலம் விரைவாக கணக்கில் தொகை வரவழைக்கவும் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவ அவசரங்கள், கல்வி, வீடு வாங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்கு உறுப்பினர்கள் தங்களது பிராவிடண்ட் பணத்தை எளிதாக இதன் மூலம் எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்றும், பிராவிடண்ட் சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம் மற்றும் யூபிஐ வசதிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
பழைய செயல்படுத்துதல் முறைகள் மூலம் பணம் கிடைக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்ற நிலையில், தற்போது சில நிமிடங்களில் பணம் கைக்கு வந்து விடும் என்பதும் இதுவரை முக்கியமான முன்னேற்றம் என்பதும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து NPCI இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும், தேவையான சோதனைகளை முடித்த பின்னர் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.