திமுக கூட்டணிக்கு பிரேமலதாவும், ஓபிஎஸ்-ம் வந்த பிறகு காங்கிரஸ் பயந்துருச்சா? வலிமையான கூட்டணியை விட்டு போக வேண்டாம்ன்னு முடிவெடுத்துட்டாங்களா? முதலமைச்சர் ஆன பின்னர் தான் கிராமம் கிராமமாக போவேன்னு விஜய் சொன்னதும்.. விஜய் கட்சிக்கு யாருமே கூட்டணிக்கு வராததும் ராகுல் காந்தியை யோசிக்க வைத்துவிட்டதா? ஆட்சி அதிகாரமும் வேண்டாம்.. கொடுத்ததை கொடுங்கன்னு திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டதா காங்கிரஸ்?
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக்குள் அரங்கேறி வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்டி வந்த காங்கிரஸ், தற்போது திமுகவிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததும், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்ததும் பார்க்கப்படுகிறது. இந்த இரு பெரும் வரவுகள் திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தனக்கான பிடியைத் தளர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஆரம்பத்தில் 35 முதல் 41 தொகுதிகள் வரை கேட்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ் போன்ற புதிய சக்திகளின் வருகையால், திமுக தனது பங்கிலிருந்து சீட்களை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. “புதிய கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டியிருப்பதால், பழைய கூட்டணி கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்” என்ற முதல்வர் ஸ்டாலினின் கறாரான நிலைப்பாடு காங்கிரஸை திகைக்க வைத்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால், தமிழகத்தில் தங்களுக்கு பாதுகாப்பான தளம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த ராகுல் காந்தி தலைமையிலான டெல்லி மேலிடம், ‘சரண்டர்’ ஆகும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் பக்கம் காங்கிரஸ் சாயக்கூடும் என சில செய்திகள் பரவின. ஆனால், விஜய் சமீபத்தில் வெளியிட்ட “முதலமைச்சர் ஆன பின்னர்தான் கிராமம் கிராமமாக போய் மக்களை சந்திப்பேன்” என்ற வினோதமான வாக்குறுதி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரை காலத்திலேயே மக்களை சந்திக்கத் தயங்கும் ஒரு தலைமையுடன் கைகோர்ப்பது தற்கொலைக்கு சமம் என ராகுல் காந்தி கருதியிருக்க வாய்ப்புள்ளது. மேலும், விஜய்யின் கட்சிக்கு இதுவரை எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணிக்கு வராதது, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கு வலுப்படுத்தியுள்ளது.
விஜய் தரப்பில் நிலவும் இந்தத் தேக்க நிலை மற்றும் அதிமுகவின் பலவீனம் ஆகியவை காங்கிரஸிற்கு வேறு வழியில்லாமல் செய்துவிட்டது. ஒருபுறம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என மல்லுக்கட்டிய காங்கிரஸ், மறுபுறம் ‘ராஜ்யசபா சீட்’ என்ற ஒற்றை இலக்கை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தங்களின் பலத்தை தக்கவைக்கத் தமிழகத்தின் ஒரு ராஜ்யசபா சீட் மிக அவசியம் என்பதால், அந்த ஒரு இடத்திற்காக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் இறங்கி வர காங்கிரஸ் சம்மதித்துள்ளது. “ஆட்சி அதிகாரம் இப்போது வேண்டாம், இருக்கும் இடத்தை தக்கவைத்து கொண்டால் போதும்” என்ற மனநிலைக்கு ராகுல் காந்தி வந்திருப்பதாகவே தெரிகிறது.
திமுகவின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ ராகுல் காந்தியை யோசிக்க வைத்துள்ளது மட்டுமல்லாமல், கூட்டணியில் தங்களின் நிலையை அவர்களுக்கு புரிய வைத்துள்ளது. ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறையும், எதிர்த்தரப்பிலிருந்து முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுத்ததும் காங்கிரஸின் ‘பார்கைனிங்’ பவரை முழுமையாக குறைத்துவிட்டது. “பயந்துவிட்டார்கள்” என்பதை விட, “நிதர்சனத்தை உணர்ந்துவிட்டார்கள்” என்பதே பொருத்தமாக இருக்கும். 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற சூழல் நிலவுவதால், அந்த வெற்றியில் ஒரு சிறு பங்கையாவது பெற்றுவிட வேண்டும் என்பதே காங்கிரஸின் தற்போதைய ராஜதந்திரமாக உள்ளது.
இறுதியாக, தமிழக அரசியலில் ‘கூட்டணி தர்மம்’ என்பது இப்போது ‘திமுகவின் தர்மமாகவே’ மாறிவிட்டது. மதிமுக, கம்யூனிஸ்ட்கள், தேமுதிக, ஓபிஎஸ், விசிக என ஒரு பெரும் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் ஸ்டாலின், காங்கிரஸை ஒரு ஜுனியர் பார்ட்னராகவே கையாள்கிறார். விஜய்யின் அரசியல் வருகை காங்கிரஸிற்கு ஒரு பிளான்-’பி’ஆக இருந்திருக்கலாம், ஆனால் அது பிளான்-பெயிலியராக மாறியுள்ளது. இதனால், டெல்லி தலைமை கொடுத்த அழுத்தங்கள் அனைத்தையும் மூட்ட கட்டி வைத்துவிட்டு, அறிவாலயம் கொடுக்கும் தொகுதிகளை அமைதியாக ஏற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராகிவிட்டது. இது 2026 போர்க்களத்தில் திமுகவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
