சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக பள்ளிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை ( அரசு அலுவலங்களுக்கு 14ம் தேதியில் இருந்து தான் விடுமுறை) தொடர் விடுமுறை விடப்படுவதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. எனினும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முன்பதிவு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக, சென்னை – மதுரை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, ”டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மதுரை சிறப்பு ரயில் (06067) ஜனவரி 11 அன்று சென்னையில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.00 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06068) ஜனவரி 12 அன்று மதுரையில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும் என்று
இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 11 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் ஜனவரி 11ம் தேதியான சென்னை-மதுரை இடையே மின்சார ரயில் போல கழிவறை வசதியுடன் கூடிய மெமு ரயில் சேவையை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ரயில் நிலையங்களில் அல்லது மொபைல் செயலி மூலம் இரண்டாம் வகுப்பு கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல இடம் கிடைக்காதவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் – கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையை போன்றது) ரயில் சேவை சனிக்கிழமை (ஜனவரி 11) அன்று இயக்கப்பட இருக்கிறது.
அதன்படி சென்னை எழும்பூர் – மதுரை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06109) சென்னையில் இருந்து ஜனவரி 11 அன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரை – சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையில் இருந்து ஜனவரி 11 அன்று இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்,”என தெரிவித்துள்ளது.