திமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. அதிமுக நம்பிக்கை.. அதிமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. திமுக நம்பிக்கை.. இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் உடைப்போம்.. இது தவெகவினர் நம்பிக்கை.. முதல்முறையாக கருத்துக்கணிப்பில் வல்லவர்கள் கூட குழப்பத்தில் இருப்பதாக தகவல்.. கடைசி நேரத்தில் கூட சரியாக கணிக்க முடியாது.. ரிசல்ட் வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்..

தமிழக அரசியலில் தற்போது நடிகர் விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றி கழகத்தின்’ வரவு, எந்த கட்சியின் வாக்கு வங்கியை குறிவைக்கிறது என்பது ஒரு பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட சிறப்புத்…

vijay erode

தமிழக அரசியலில் தற்போது நடிகர் விஜய் அவர்களின் ‘தமிழக வெற்றி கழகத்தின்’ வரவு, எந்த கட்சியின் வாக்கு வங்கியை குறிவைக்கிறது என்பது ஒரு பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் சுமார் 97 லட்சம் போலி மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் சில கட்சிகள் பெரும் கவலையில் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், இல்லாத ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்பும் வித்தையில் அக்கட்சியினர் வல்லவர்கள் என்பது ஒரு பகிரங்க ரகசியம். எனவே, இந்த ஓட்டு நீக்கம் நேரடியாக அந்த கட்சிகளின் பலத்தை அடிக்கும் என கருதப்படுகிறது.

அடுத்ததாக, விஜய் அவர்கள் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற கேள்வி முக்கியமானது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 45% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 40% வாக்குகளையும் பெற்றிருந்தன. விஜய்யின் வருகை என்பது 2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை போன்றது என அரசியல் விமர்சகர்கள் ஒப்பிடுகின்றனர். அன்று விஜயகாந்த், அதிமுக கூட்டணிக்கு வரவேண்டிய நடுநிலையாளர் வாக்குகளை பிரித்ததால், திமுக மைனாரிட்டி ஆட்சியை அமைத்தது. ஆனால் விஜய்க்கு, விஜயகாந்தை விட அதிக ரசிகர் பட்டாளம் இருந்தாலும், விஜயகாந்த் பெற்றிருந்த ‘நிர்வாகத் திறன்’ மற்றும் ‘பொதுமக்கள் செல்வாக்கு’ விஜய்க்கு இருக்குமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

புள்ளியியல் ரீதியாக பார்த்தால், விஜய்யின் வாக்கு வங்கி 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் அடர்த்தியாக உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டோரிடம் அவரது செல்வாக்கு வேகமாக குறைகிறது. தற்போதைய கள ஆய்வின்படி, விஜய் அவர்களின் வருகை குறிப்பாக பட்டியல் சமூக இளைஞர்களிடையே ஒரு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கு வங்கி பாரம்பரியமாக திராவிட சித்தாந்தங்களால் திமுக பக்கம் கட்டப்பட்டிருந்தது. எனவே, இந்த 21% வாக்குகளில் விஜய் அவர்கள் கைய வைக்கும்போது, அது நேரடியாக திமுகவின் 5% முதல் 6% வரையிலான சாலிடான வாக்குகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சுமார் 12-13% வரை உள்ள கிறிஸ்தவ மக்களின் வாக்குகளிலும் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிகிறது. விஜய் தனது மதத்தை சார்ந்தவர் என்ற ஒரு மென்மையான எண்ணம் அம்மிக்களிடையே உள்ளது. இதனை உணர்ந்தே முதல்வர் ஸ்டாலின் அண்மையில் நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி அந்த வாக்குகளை தக்கவைக்க முயன்றார். இருப்பினும், விஜய்யின் வருகையால் கிறிஸ்தவ வாக்குகளில் சுமார் 5% வரை நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏற்படும் மாற்றம் திமுகவின் பலத்தை வெகுவாக குறைக்கும்.

மாற்றத்தை விரும்பும் சுமார் 18% வாக்காளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் 8% இளைஞர்கள் மத்தியிலும் விஜய்யின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், விஜய் வாராவாரம் ஒரே மாதிரியான பேச்சுகளைப் பேசுவது மற்றும் சமூகப் பிரச்சனைகளில் தெளிவான நிலைப்பாடு எடுக்காதது இவர்களிடையே ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. “நான்தான் மாற்று” என்று சொல்வதை விட, “நான்தான் சரியான மாற்று” என்ற நம்பிக்கையை உருவாக்குவதில் விஜய் இன்னும் பின்தங்கியே இருக்கிறார். இதனால் மாற்றத்தை விரும்புவோர் இன்னும் முழுமையாக விஜய் பக்கம் சாயவில்லை.

இறுதியாக, விஜய் அவர்கள் அடுத்து ‘சமத்துவ கிறிஸ்துமஸ்’ கொண்டாட்டம் மூலம் மக்களை அணுக திட்டமிட்டுள்ளார். இது மதமாற்ற இயக்கங்களின் பின்னணியில் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அரசியல் ரீதியாக இது விஜய்க்கு ஒரு மைலேஜ் தரும் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில் விஜய் யாருடைய ஓட்டை அதிகம் பிரிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.