புத்தாண்டு 2025.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. பாஸ்போர்ட், வேலைவாய்ப்புக்கு சிக்கல் வர வாய்ப்பு

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ‘மது போதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை…

Police impose strict restrictions on New Year celebrations in Chennai

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ‘மது போதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

2024-ம் ஆண்டு விரைவில் விடைபெறுகிறது.. 2025-ம் ஆண்டு புதன்கிழமை அன்று பிறக்கிறது. புத்தாண்டு பிறக்கும் போது பொதுமக்கள் ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டத்துடன் பொதுமக்கள் வரவேற்பார்கள். குடிமகன்கள் குடித்துவிட்டு உற்சாக பார்களில் நடனம் ஆடுவார்கள். பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுவது அதிகமாக நடக்கும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்த புத்தாண்டு பண்டிகையின்போது 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மதுபான கூடங்கள், நட்சத்திர விடுதிகளுக்கும் தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் 2025 புத்தாண்டையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “31-ந் தேதி அன்று இரவு 9 மணியில் இருந்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் அவர், முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு போலீசார் சிறப்பாக பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31-ந் தேதி மாலை முதல் 1-ந் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரை ஓரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தவும், மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்களை மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.