தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருகை, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளதை காட்டுகிறது. குறிப்பாக, ஆந்திர அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ள பவன் கல்யாண், நடிகர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. “என்னைப்போலவே நீங்கள் துணை முதல்வர் ஆகலாம்; சிரஞ்சீவி, கமல்ஹாசன் அல்லது விஜயகாந்த் போன்று தனித்து நின்று கஷ்டப்பட வேண்டாம்” என்று பவன் கல்யாண் விஜய்யிடம் பேசியதாக கூறப்படும் செய்திகள், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சினிமாவில் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் இந்த இரண்டு நட்சத்திரங்களும், அரசியலில் கைகோர்த்தால் அது தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தைத் தரும் என பாஜக தரப்பு நம்புகிறது.
தமிழக வெற்றி கழகத்திற்கு 70 தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் 8 அமைச்சரவை இடங்கள் என ஒரு மெகா கூட்டணி பேரம் பேசப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்கு வங்கியை பிரிப்பதற்கும், ஆட்சி கட்டிலில் இருந்து அவர்களை இறக்குவதற்கும் விஜய் போன்ற ஒரு மிகப்பெரிய மக்கள் செல்வாக்குள்ள முகம் தேவை என்பதை டெல்லி தலைமை உணர்ந்துள்ளது. அதற்கேற்ப, விஜய்யின் செல்வாக்கை வாக்குகளாக மாற்றினால், அவருக்கு கணிசமான இடங்களை வழங்கி ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கத் தயார் என ஒரு பெரிய டீல் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுவது ‘வெற்றி வாய்ப்பு’ மட்டுமே. பவன் கல்யாண் சுட்டிக்காட்டியது போல, விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் தனித்து நின்று போராடியபோது சந்தித்த சவால்களை விஜய் எதிர்கொள்ளக் கூடாது என்பதே கூட்டணி கட்சிகளின் வாதமாக இருக்கிறது. 50 இடங்களை வெற்றி பெறச்செய்வ்து என்பதை உறுதி செய்யும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு பதிலாக விஜய் கூட்டணியின் முகமாக மாறினால் போதும் என்றும் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதோடு, தமிழகத்தில் ஒரு வலிமையான மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சி என பலரால் பார்க்கப்படுகிறது.
திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்படும் எதிர்க்கட்சிகளுக்கு விஜய் ஒரு மிகப்பெரிய துருப்புச் சீட்டாக தெரிகிறார். ஆளுங்கட்சியின் கட்டமைப்பை சிதைக்க வேண்டுமென்றால், இளைஞர்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவர் தேவை. அதனால்தான், விஜய் கேட்கும் நிபந்தனைகளை தாண்டி, அவருக்கு அதிகாரத்தில் பெரும் பங்கு கொடுக்க என்.டி.ஏ தயாராக உள்ளது. 2026-ல் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தம் இப்போது தவெக மீது விழுந்துள்ளது.
இருப்பினும், நடிகர் விஜய் ஆரம்பத்திலிருந்தே தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பவராகவே தெரிகிறார். “கூட்டணிக்கு ஆட்சி அதிகாரம், தொகுதி பங்கீடு” என்பதில் அவர் சமரசம் செய்துகொள்வாரா அல்லது தனது கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்ட தனித்துப்போவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஒருபுறம் பவன் கல்யாண் போன்றவர்களின் அனுபவ ரீதியான அறிவுரைகள், மறுபுறம் தமிழகத்தின் தனித்துவமான திராவிட அரசியல் சூழல் என விஜய் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இறுதியாக, 70 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என்ற இந்த டீல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அது விஜய்யின் அரசியல் பயணத்தின் வேகத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், தனது கொள்கைகளில் மாற்றமின்றி ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே தனது லட்சியம் என்று அவர் அறிவித்துள்ள நிலையில், இந்த கூட்டணி பேரம் அவருக்குச் சாதகமாகவே அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2026-ஆம் ஆண்டு தமிழக தேர்தல் களம், வெறும் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டுமன்றி, தனிநபர் செல்வாக்கிற்கும் கூட்டணி கணக்குகளுக்கும் இடையிலான மிகப்பெரிய யுத்தமாக மாறப்போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
