எக்ஸ் தளத்தில் Parody அக்கவுண்டுகள் மற்றும் நடிகர்-நடிகைகளின் Fan அக்கவுண்டுகளை பலர் வைத்திருக்கும் நிலையில், இந்த அக்கவுண்டுகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்பு, பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தினார் என்பதும், ப்ளூடிக் வாங்குபவர்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு தருவதாகவும் அறிவித்திருந்தார். இதனை நம்பி கோடிக்கணக்கான மக்கள் ப்ளூடிக் வாங்கிய நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, பிரபலங்களின் பெயர்களில் Parody அக்கவுண்டுகள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகளின் பெயரில் Fan அக்கவுண்டுகளும் ஏராளமாக இருந்தன. அதேபோல், அரசியல் கட்சிகள் பெயரிலும் அக்கவுண்டுகள் இருந்த நிலையில், இவற்றின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய விதிமுறை வந்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதி முதல், அனைத்து கணக்குகளும் தங்கள் கணக்கின் பெயரை தொடக்கத்தில் குறிப்பிட வேண்டும் என்றும், அந்த கணக்கு பிரதிபலிக்கும் நபர் அல்லது நிறுவனம் குறித்த படங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எலான் மஸ்கின் Parody அக்கவுண்ட் என்றால், எலான் மஸ்க்கின் புகைப்படத்தை புரொபைலில் பயன்படுத்தக்கூடாது. விஜய் அல்லது அஜித்தின் ரசிகர் கணக்கு என்றால், விஜய், அஜித்தின் புகைப்படங்களை புரொபைலில் பயன்படுத்தக்கூடாது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதை அடுத்து, போலியாக தங்கள் சொந்த பெயரில் அக்கவுண்ட் இல்லாமல், பிறரது பெயரில் அக்கவுண்ட் ஆரம்பிப்பவர்களுக்கு சிக்கல் என்று கூறப்பட்டு வருகிறது.
அதேபோல், பிரபலங்களின் பெயரை வைத்து கணக்கை தொடங்கி, கேலியும் கிண்டலும், பிறரை அவமதிக்கும் பதிவுகளையும் கண்காணித்து வருவதாகவும், இவ்வாறான கணக்குகள் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.