பரந்தூரில் அமையவிருக்கும் சென்னை இரண்டாவது விமான நிலைய திட்டம், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தாமதமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணம், ஏகனாபுரம் கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பு இல்லாததே என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
விமான நிலையத்தின் முக்கியப் பகுதியான ரன்வே, ஏகனாபுரம் கிராமத்தில்தான் அமையவுள்ளது. ஆனால், கிராம மக்கள் நிலம் கொடுக்க மறுப்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாகியுள்ளது. டெண்டர் விடுவதற்கு முன்பு, திட்டத்திற்கு தேவையான கணிசமான நிலம் அரசிடம் இருக்க வேண்டும். நிலம் கிடைக்காததால், டெண்டர் விடும் பணியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போயுள்ளது.
முதலில், தமிழ்நாடு அரசு அக்டோபர் 2025-க்குள் நிலம் கையகப்படுத்துவதை முடித்து, ஜனவரி 2026-ல் திட்டப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், முதல் கட்ட பணிகள் டிசம்பர் 2028-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது டெண்டர் விடும் பணியே அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போயிருப்பதால், திட்டத்தின் நிறைவு டிசம்பர் 2029 அல்லது 2030-ன் தொடக்கத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது ஒருவேளை இந்த திட்டமே ரத்து செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது அந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றியாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
