அண்மைக்காலமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை இந்தியாவிற்கு எதிராக நிலப்பரப்பை தாண்டி, கடல் வழியாக புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கடல் ஜிஹாத்” அல்லது “சமுத்திர ஜிஹாத்” என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
2024 முதல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் ஆட்களுக்கு தீவிர நீச்சல் பயிற்சி மற்றும் ஆழ்கடல் டைவிங் (Deep Sea Diving) பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்துர்’க்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நீச்சல் கற்றுக்கொள்வது மதத்திற்கு எதிரானது அல்ல என்று கூறி இளைஞர்களை இதில் ஈடுபடுத்தி வருகிறது.
மும்பை 26/11 தாக்குதலுக்கு முன்பும் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆழ்கடல் டைவிங் மூலம் இந்திய கப்பல்களை குறிவைக்கவும் அல்லது இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் துறைமுகங்களை தாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ‘லிம்பெட் மைன்களை’ பயன்படுத்த கூடும் என்று அஞ்சப்படுகிறது. இவை காந்தத் தன்மை கொண்ட வெடிமருந்துகள் ஆகும், இவற்றை கடலுக்கு அடியில் சென்று கப்பல்களின் அடிப்பகுதியில் பொருத்தி வெடிக்க செய்ய முடியும்.
குஜராத் மற்றும் சிந்து மாகாணத்திற்கு இடையே உள்ள ‘சர் கிரீக்’ சதுப்புநில பகுதியில் பாகிஸ்தான் கடற்படை தளபதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் எல்லையை சிறிதளவு மாற்றினாலும், பாகிஸ்தானின் பிரத்யேக பொருளாதார மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவிற்கு நெருக்கமாத் தங்கள் பிடியை வலுப்படுத்தவும் பாகிஸ்தான் இந்த சதுப்புநில பகுதிகளில் நவீன வாகனங்களை பயன்படுத்தி வருகிறது.
சீனா தனது கடல் எல்லைகளை விரிவுபடுத்த தங்கள் நாட்டு மீனவர்களை பயன்படுத்துவது போல, பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை மீனவர் வேடத்தில் இந்திய கடற்பகுதிக்குள் ஊடுருவ செய்யத் திட்டமிட்டுள்ளது. சாதாரண மீன்பிடிப் படகுகள் மூலம் தாக்குதல் நடத்தும்போது, அவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.
பாகிஸ்தான் சர்வதேச அளவில் இந்தியா மீது தவறான குற்றச்சாட்டை சுமத்த திட்டமிடப்பட்டு, பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. இதன் மூலம், தாங்கள் செய்யப்போகும் தாக்குதலை இந்தியாவின் மீது பழியாக போட அவர்கள் முயற்சிக்கின்றனர்.
மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் சட்டவிரோத குடியேறிகளை பயன்படுத்தி, போராட்டங்கள் என்ற பெயரில் உள்நாட்டு கலவரங்களை உண்டாக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கவும் ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகள், குறிப்பாக கராச்சிக்கு நெருக்கமான துறைமுகங்கள் மற்றும் வங்காளதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் உளவு அமைப்புகளான என்.ஐ.ஏ , ஐ.பி மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து இந்த “கடல் ஜிஹாத்” அச்சுறுத்தலை முறியடிக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
