பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளையும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலையும் இந்தியா உள்பட உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
இராணுவத் தளபதி முனிருக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ பதவி வழங்கப்பட்டு, அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட விவகாரம், சாதாரண நிகழ்வல்ல என்றும், இதில் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் பேரங்கள் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, முனிரின் ஓய்வு மற்றும் புதிய நியமனத்திற்கான அறிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி, சட்டப்படி அமைந்ததல்ல என்றும், இது அவரது பதவி காலத்தின் தொடர்ச்சியை சிக்கலாக்கும் என்றும் கூறப்படுகிறது.
முனிரின் நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம், ஷெரீப் குடும்பத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான இறுக்கமான அரசியல் பேரமே என்று கூறப்படுகிறது. நவாஸ் ஷெரீப் லண்டனில் தங்கி, இராணுவத்துடனான பேச்சுவார்த்தையில், இம்ரான் கான், ஃபைஸ் ஹமீது, மற்றும் பாஜ்வா போன்றவர்களை நிரந்தரமாக ஒடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், இதற்கு பிரதிபலனாகவே முனிரின் நியமனம் தாமதமானதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
முனிரின் பதவிக் கால நீட்டிப்பு, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு புதிய அதிகாரங்களுடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தலைமை தாங்கும் வகையில் நிலைநிறுத்தியுள்ளது. இதனால், முனிர் தற்போது ஷெரீப் குடும்பத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஷெரீப் மற்றும் அவர் குடும்பத்தினரை முனீரே பிற்காலத்தில் கையாள்வார் என்றும், ராணுவத்தில் அதிகாரம் எல்லையற்றதாக மாறும் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இம்ரான் கான் மீது இராணுவம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முனையலாம் என்றும், குறிப்பாக இம்ரான் கானை அரசியலில் இருந்து முழுமையாக விலக்குவதற்கு திட்டமிடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதேசமயம், முனிரின் நீண்ட பதவிக்காலம், இராணுவத்திற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி, பெஷாவர் மற்றும் பஹவல்பூர் ஆகிய மூன்று கோர் கமாண்டர்கள் முனிரின் நியமனத்தில் மகிழ்ச்சி அடையவில்லை என்றும், ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு காரணமாக பல பிரிகேடியர்கள் மற்றும் மேஜர் ஜெனரல்களுக்கு தலைமை பதவிக்கான வாய்ப்பே இல்லாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை மிக மோசமாகி வருவதாகவும், தாலிபான் மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்புகளின் அச்சுறுத்தலை சமாளிக்க இராணுவம் தவறிவிட்டது என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், முனிர் பொருளாதார விவகாரங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் அதிக ஆர்வம் காட்டுவது இராணுவத்தின் பலவீனத்தை காட்டுகிறது. சி.ஆர்.எஸ்.எஸ். அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினரின் இழப்புகள் 46% அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் பல பழங்குடி பகுதிகளில் இராணுவத்தினரால் ரோந்து செல்ல முடியவில்லை. மாறாக, பிஎல்ஏ மற்றும் டி.டி.பி. போன்ற தீவிரவாத குழுக்கள் தான் அந்தப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
சிந்து மாகாணத்தில் பிரிவினைவாத அமைப்புகளின் எழுச்சி, மற்றும் கராச்சி லியாரி போன்ற பகுதிகளில் சிந்து தேசியவாத கொடிகள் பறக்கவிடப்படுவது போன்ற நிகழ்வுகள், அங்கு புதிய கிளர்ச்சி தொடங்குவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியைப் பலவீனப்படுத்த மாகாணங்களை பிரிக்கும் முயற்சிக்கு சர்தாரி மற்றும் பிலாவல் பூட்டோ கடும் எதிர்ப்பு தெரிவிப்பர்.
இராணுவ தளபதி முனீர் தனது முழு கவனத்தையும் உள்நாட்டு பாதுகாப்பில் செலுத்துவதே பாகிஸ்தானின் நிலைத்தன்மைக்கு ஒரே வழி என்றும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தேவையற்ற பதற்றத்தை குறைத்துக்கொண்டு, டி.டி.பி.யின் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மாறாக, அவர் அனைத்து முனைகளையும் திறந்து வைத்து, தனது பிரச்சாரத்தை நம்ப தொடங்கினால், அது இராணுவத்தின் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கி, அவரது தலைமையை கேள்விக்குறியாக்கும்.
நீண்ட பதவி காலத்தின் மூலம் அதிகாரத்தை தக்கவைக்க முனிர் மேற்கொண்ட அனைத்து பேரங்களும், இறுதியில் உள்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும், 2035 வரை அவர் நீடிப்பது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
