மும்பையில் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பிரபல நடிகர்களுக்காக ஒரு பிரத்யேகமான விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தில் விவிஐபிகளுக்காக தனி விமான வழிகளோ பாதையோ இல்லை. இதன் காரணமாக, விவிஐபி விமான நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில், விவிஐபி பயணிகளுக்காக புதிய வகை விமான நிலையம் ஒன்று கட்டப்பட உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் இந்த கட்டுமான பணிகள் தொடங்கி, 2030 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவிஐபி விமான நிலையத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் அதிகாரிகள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், பாதுகாப்புத்துறையை சார்ந்த அதிகாரிகள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், பிரபல நடிகர்கள், பணக்கார தொழிலதிபர்கள், விமான நிலையம் உருவாக்க நன்கொடை அளித்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இந்த விமான நிலையத்தை எட்டிக் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமான நிலையம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இவ்வாறு ஒரு விமான நிலையம் பணக்காரர்களுக்காக என உருவாக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.