திரையரங்க வளாகத்தில் யூடியூபர்கள்… திருப்பூர் சுப்ரமணியம் போட்ட கண்டிஷன்..

By John A

Published:

கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும். ஞாயிற்றுகிழமை சன்டிவியில் வரும் திரை விமர்சன நிகழ்ச்சியைப் பார்த்து தான் அந்தப் படத்திற்குப் போகலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பர். யூடியூப், ஓடிடி ஆகிய எதுவும் இல்லாததால் பட தயாரிப்பாளர்களும், திரையரங்கு அதிபர்களும் தோல்விப் படமாக அமைந்தாலும் குறைந்த லாபம் பார்த்துவிடுவர்.

ஆனால் இப்போது எப்போது திரைப்படம் வருகிறது, எப்போது திரையரங்குகளில் இருந்து மாற்றப்படுகிறது என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. வாரத்திற்குக் குறைந்தது 3 படங்களாகவது ரிலீஸ் ஆகி விடுகிறது. மேலும் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால் குறைந்த பொருட்செலவில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில்நுட்பத்தின் உதவியால் அதிகமாகச் செலவழித்தும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போல குறைந்தது 6 மாதமாவது ஒரு படத்தினை உருவாக்கி திரையரங்குகளில் வெளியிடும் போது முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் முன் வந்து நிற்பது யூடியூபர்கள் தான். சினிமா யூடியூப் சேனல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதால் திரைப்படம் பற்றி கருத்தினைக் கேட்க ஒருமினி கூட்டமே அங்கு திரள்கிறது. இதனால் ரசிகர்கள் இவர்களைக் கண்டாலே தெறித்து ஓடுகின்றனர். மேலும் யூடியூபர்கள் விமர்சனம் சொல்கிறேன் என்று அனைத்து படங்களையும் டைட்டில் கார்டு முதல் என்ட் கார்டு வரை அலசி ஆராய்ந்து விடுவதால் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி விடுகிறது.

நடிகர் பாலாஜியை அடிக்கப் பாய்ந்த ஆட்டோ டிரைவர்.. பரபரப்பான படக்குழு நடந்தது என்ன?

இதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிப்படைகிறது. யூடியூப் விமர்சனங்களாலும், ரசிகர்களின் கருத்துக்களாலும் படங்கள் சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கிவிடுகின்றன. மேலும் நல்ல கதையுள்ள திரைப்படங்கள் கூட சரியான விமர்சனங்கள் இல்லாததால் தோல்வி அடைய நேரிடுகிறது. இதனைத் தவிர்க்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், திரையரங்க வளாகத்திற்குள் ரசிகர்களிடம் படம் பற்றி கருத்தினைக் கேட்க பேட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், அவ்வாறு அனுமதிப்பது நமது வியாபாரத்தினை நாமே சிதைப்பது என்றும், தவறான விமர்சனங்களால் ஏராளமான படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்தக் கருத்துக்கு ஏராளமனோர் வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் அதே யூடியூப் சேனல்கள்தான் நல்ல படங்களை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்கிறது எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.