புதிய குற்றவியல் சட்டம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே டெல்லியில் ஒருவர் இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக இன்று முதல் இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் கால சட்டங்களை அடிப்படையில் கொண்டுதான் நீதி வழங்கப்பட்டு வந்த நிலையில், சாமானிய மக்களின் பாதையில் எளிமையை புகுத்தும் வகையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த சட்டம் மக்களவை, மாநிலங்களவை ஆகியவைகளில் ஒப்புதல் பெற்ற பிறகு ஜனாதிபதியின் கையெழுத்திட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் முதல் தகவல் அறிக்கையின் நகலை இலவசமாக பெற்றுக் கொள்வார்கள் என்றும் ஏதேனும் ஒரு வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க உரிமை உண்டு என்றும் கைது விவரங்கள் குறித்த முழு விவரங்களை காவல் நிலையங்களின் பதாகையில் குறிப்பிட வேண்டும் என்றும் இந்த சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என புதிய குற்றவியல் சட்டம் கூறுகின்றது. மேலும் 90 நாட்களுக்குள் ஒரு வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிவிப்புகளை பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது.
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறை முடிந்தவரை பெண் நீதிபதியால் மேற்கொள்ள வேண்டும் என்றும் பெண் நீதிபதி இல்லாத சமயத்தில் ஆண் நீதிபதி அந்த நடைமுறையை மேற்கொள்ளலாம் என்றும் புதிய குற்றவியல் சட்டம் கூறுகிறது.
வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க நீதிமன்ற சம்மன்கள் இனிமேல் மின்னணு முறையில் அனுப்பப்படும் என்றும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே வழக்கை ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதிக்கும் என்றும் புதிய குற்றவியல் சட்டம் கூறுகிறது.
மேலும் சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்ய இந்த புதிய குற்றவியல் சட்டம் நன்பகத்தன்மையுடன் இருக்கும் என்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய சட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் அமைச்சர் அமித்ஷா இது குறித்து கூறிய போது புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியர்களால் இந்தியர்களுக்காக இந்திய பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது என்றும் ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்தில் தண்டனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த புதிய சட்டத்தில் நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறியுள்ளார்.