தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாரில் பெற்ற மாபெரும் வெற்றி எதிர்பாராதது அல்ல என்றாலும், 202 தொகுதிகளை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது, மகா கட்பந்தன் செய்த வியூக தவறுகளால் விளைந்ததே ஆகும்.
பிரதமர் மோடி, NDA-வின் வெற்றிக்கு M (மகிளா – பெண்கள்) மற்றும் Y (யூத் – இளைஞர்கள்) ஆகியோரை இணைத்த ஃபார்முலாவே காரணம். பெண்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி போன்ற திட்டங்களால், ஆண் வாக்காளர்களை காட்டிலும் 9% கூடுதல் பெண் வாக்காளர்கள் வாக்களித்தது உண்மை.
பிகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகாரில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இப்போது பேரம்பேசும் சக்தியை இழந்துள்ளது. கடந்த காலங்களில் அதிக தொகுதிகள் கேட்டவர்கள், இனி அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக முடியும் என்பதால், தி.மு.க. குறைவான சீட்டுகளை மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் பிகாரில் NDA-வின் மெகா வெற்றி, தமிழ்நாட்டில் கூட்டணியை மேலும் பலப்படுத்த பி.ஜே.பி.க்கு ஊக்கமளிக்கும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாய்ப்பு’ என்ற பிகார் வெற்றி கொள்கையை பி.ஜே.பி. இங்கே செயல்படுத்தும். அ.தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை பாஜக பெறுவதற்கும், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை பாஜகவே கேட்டு பெறுவதற்கும் வலுவான நிலையில் உள்ளது.
பாமகவில் குடும்பப் பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு தரப்பினரையும் NDA-க்குள் கொண்டு வந்து ஒரே குடையின் கீழ் போட்டியிட வைக்க பாஜக முயற்சிக்கும். இது அவர்களின் கோர் வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கும்.
ஜி.கே. வாசன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பது, ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்திப்பது போன்ற நிகழ்வுகள், கூட்டணியை விரைவாக ஒருங்கிணைக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.
டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் கூட்டணியை விட்டு அவர்களாகவே வெளியேறினாலும், இவர்களது 1% வாக்குகளும் கூட சிதறாமல் இருப்பதற்காக, இவர்களுக்கான தொகுதிகளைப் பாஜக நேரடியாக ஒதுக்கி, NDA குடைக்குள் மீண்டும் கொண்டு வர முயலலாம்.
மொத்தத்தில் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையான கூட்டணியே பிகாரில் வெற்றிக்கு வழிவகுத்தது என்ற பாடம் கற்று தரப்பட்டுள்ளது. பொருந்தா கூட்டணியால் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியின் தோல்வி, தனித்து போட்டியிட்டதால் பிரசாந்த் கிஷோரின் படுதோல்வி ஆகியவற்றின் பாடங்களை கற்று கொண்டு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
