நவி மும்பையில் ஒரு பெண் தனது பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சக பயணிகளிடம் ஒப்படைத்துவிட்டு தப்பித்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
சம்பவத்தன்று, அந்த பெண் ஹார்பர் லைன் புறநகர் ரயிலில் கதவருகே அமர்ந்திருந்தார். ஒரு கையில் குழந்தையையும், மறு கையில் பைகளையும் வைத்திருந்த அவர், ரயிலில் இருந்து இறங்குவதற்கு உதவுமாறு அருகில் இருந்த இரண்டு பெண் பயணிகளிடம் உதவி கோரியுள்ளார். ஜூய்நகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய அந்த பயணிகள், அடுத்த சீவுட்ஸ் நிலையம் வரை அந்த பெண்ணுடன் சென்று உதவ முடிவு செய்துள்ளனர்.
சீவுட்ஸ் நிலையம் வந்ததும், அந்த இரண்டு பெண் பயணிகளும் முதலில் ரயிலில் இருந்து இறங்கினர். அப்போது, அந்தப் பெண் தனது குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார். ஆனால், ரயிலில் இருந்து இறங்குவதற்கு பதிலாக, ரயில் புறப்படும் நேரத்தில், தனது பைகளை எடுக்க போவதுபோல் கதவருகே காத்திருந்த அந்தப் பெண், ரயில் புறப்பட்டதும் அங்கிருந்து சென்றுவிட்டதாக அதிகாரி கூறினார்.
குழந்தையை வைத்திருந்த அந்த இரண்டு பயணிகளும், முதலில் அந்தப் பெண் தவறுதலாக இறங்காமல் போய்விட்டதாகவும், அடுத்த நிலையத்தில் இருந்து எதிர் திசையில் வரும் ரயிலில் திரும்பி வருவார் என்றும் நினைத்துள்ளனர். ஆனால், அவர் திரும்பவே இல்லை.
இதையடுத்து, இரண்டு பயணிகளும் குழந்தையுடன் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை விவரித்தனர். அவர்கள் வாஷி ரயில்வே போலீசாரிடம் அழைத்து செல்லப்பட்டனர். உடனடியாக, போலீசார் குழந்தையை கைவிட்ட அந்த பெண்ணை தேடும் பணியைத் தொடங்கினர்.
12 வயதுக்குட்பட்ட குழந்தையை கைவிடுதல் என்ற பிரிவின் கீழ் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சீவுட்ஸ் நிலையத்திலிருந்து ஐந்து நிலையங்களுக்கு அப்பால் உள்ள கண்டேஷ்வர் ரயில் நிலையத்தில் அந்த பெண் இறங்கியது தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
