காலக்கெடு முடிந்துவிட்டது.. பான் – ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

By Bala Siva

Published:

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடு ஜூன் 30 உடன் முடிவடைந்துவிட்டது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செல்லாது என்றும் அதனை வைத்து எந்தவித பணியும் செய்ய முடியாது என்றும் குறிப்பாக வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பான் – ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில் இதுவரை இணைக்காதவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

இதுவரை பான் – ஆதாரை இணைக்காதவர்கள் ரூ. 1,000 அபராதம் செலுத்திய பிறகு, நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு அபராதம் செலுத்தியதை ஆதார் எண்ணுடன் தெரிவிக்க வேண்டும். அந்த அதிகாரி இதுகுறித்து ஆய்வு செய்து பான் எண்ணை மீண்டும் இயக்க செய்வார். ஆனால் அதற்கு குறைந்தது 30 நாட்கள் ஆகும்.

வருமான வரி விதி 114AAA இன் கீழ், ஒரு நபரின் பான் செயலிழந்தால், அவர்களால் தங்களுடைய பான் எண்ணை யாருக்கும் வழங்கவோ, தெரிவிக்கவோ முடியாது. சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அவர்கள் பொறுப்பாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண் செயலிழந்தால் என்னென்ன பிரச்சனைகள்?

செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி தனிநபர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

நிலுவையில் உள்ள ரிட்டர்ன்கள் அல்லது ரீஃபண்டுகள் செயல்படாத பான் எண்ணை பயன்படுத்தி பெற முடியாது.

பான் செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமானத்தின் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை முடிக்க முடியாது.

பான் செயலிழந்த பிறகு, மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) அதிக விகிதத்தில் கணக்கிடப்படும்.

ஆதார்-பான் இணைப்பு: அபராதம் செலுத்துவது எப்படி?

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு அபராதம் செலுத்த, ஒருவர் இந்த செயல்முறையைப் பின்பற்றலாம்.

படி 1: நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) இணையதளம் சென்று உங்களுடைய கணக்கில் லாகின் செய்யவும்

படி 2: முகப்பு பக்கத்தில், “PAN உடன் ஆதாருடன் இணைக்கவும்” விருப்பத்தைத் தேடவும்.

படி 3: தேவையான விவரங்கள் உள்ளிடப்பட்டதும், சலான் எண். ஐடிஎன்எஸ் 280 இன் கீழ் மேஜர் ஹெட் 0021 (கம்பெனிகளைத் தவிர மற்ற வருமான வரி) மற்றும் மைனர் ஹெட் 500 (மற்ற ரசீதுகள்) ஆகியவற்றுடன் தொகையைச் செலுத்துவதன் மூலம் பான் – ஆதாரை இணைக்கலாம்.