பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்குப் பின் பா. ரஞ்சித் பொதுவெளிகளில் தற்போது அதிகமாக கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார். ஆம்ஸ்ட்ராங்-ன் நெருங்கிய நண்பராக விளங்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அவரது கொலை சம்பம் கேட்டவுடனேயே உடனே மருத்துவமனைக்கு விரைந்து கதறி அழுதார். மேலும் மறுநாள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியிலும் தனது குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நேற்று நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக் கோரி சற்று கோபத்துடன் பேசினார். இந்நிலையில் பா.ரஞ்சித் பற்றி கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் சேகர் பாபு அவர் யாரென்றே தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சேகர்பாபுவிடம் இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது சற்று காட்டமான முகத்துடன் அமைச்சர் சேகர்பாபு, ரஞ்சித் யாரென்றே எனக்குத் தெரியாது எனவும், எனக்கு அரசியல்வாதிகளை மட்டுமே தெரியும் என்றும் பதில் அளித்தார். அமைச்சர் சேகர் பாபுவின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பா.ரஞ்சித் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் குறித்து, “அண்ணணுக்கு எதிராக நாங்கள் எப்போதும் திரும்ப மாட்டோம். எங்களுடைய குரல் நீங்கள். உங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றும் திருமாவிற்கு ஆதரவாகவும் பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும் எனவும் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத்தக்கது.