சமூகத்தில் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற நிலையில் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. அதில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்று அரசு அறிவித்தவுடன் எதிர்க்கட்சிகள் இதையே அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தின.
நிறைய மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என திமுகவினர் பிரச்சாரம் செல்லும் இடங்களில், குறிப்பாக உதயநிதி பிரச்சாரம் சென்ற இடங்களில் பெண்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அவர் கண்டிப்பாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இத்திட்டம் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள 1,15,27,172 மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைள் மீதான விவாதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு நிராகரிக்கப்பட்டிருந்தால் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம். மேலும் விண்ணப்பிப்பவர் அளித்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின்னர் 30 நாட்களுக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக மேல் முறையீடு செய்யலாம். மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் இதுவரை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.