கடைசி நாளில் முடங்கிய இணையதளம்.. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் தவித்த மக்கள்..!

By Bala Siva

Published:

வருமான வரி தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்றைய தினம் வருமான வரி துறையின் இணையதளம் முடங்கியதால் பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் போனதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கும் நிலையில் நேற்று தான் கடைசி தினம் என்பதால் மிக அதிக எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் பலர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ததாக தெரிகிறது.

ஒரே நேரத்தில் பலர் ரிட்டன் தாக்கல் செய்ததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இணையதளம் முடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பலர் இது குறித்து தங்களது எக்ஸ் தளத்தில் கோபத்தை வெளிப்படுத்தினர். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இணையதளம் முடங்கி விட்டது என்றும் இந்த இணையதளத்தை இனிவரும் நாட்களிலாவது மேம்படுத்துங்கள் என்றும் கோபமாக பதிவு செய்தனர்.

மேலும் வருமான வரி இணையதளத்தை இன்போசிஸ் நிறுவனம் தான் உருவாக்கியதை அடுத்து இன்போசிஸ் நிறுவனத்தையும் டேக் செய்து பலர் கோபமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதனை அடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் சீராகும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் இணையதளம் முடக்கம் காரணமாக சிலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்றுக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களுக்கு சலுகைகள் கிடைக்காது என்பது மட்டும் இன்றி 5000 ரூபாய் அபராதமும் செலுத்த நேரிடும் என்பதால் பலர் தங்கள் கோபத்தை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.