கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 59 வயது நபர் மருத்துவமனையின் லிப்ட்டில் சிக்கி கொண்ட நிலையில் அவர் இரண்டு நாட்களாக லிப்டிலேயே இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் என்ற 59 வயது நபர் முதல் மாடியில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக்கு செல்வதற்காக லிப்ட்டில் சென்று உள்ளார். அப்போது திடீரென லிப்ட் இடையில் நின்றுவிட்ட நிலையில் யாருமே அவரை காப்பாற்ற வரவில்லை.
அவர் அவசர கால பட்டனை அழுத்திய போதிலும் எந்தவிதமான ரெஸ்பான்ஸ் இல்லை. இதனை அடுத்து அவர் தனது மொபைல் போன் மூலம் அவசர எண்ணுக்கு போன் செய்தார். யாரும் போனை எடுக்கவில்லை. அது மட்டும் இன்றி பதட்டத்தில் அவர் மொபைல் ஃபோனை கீழே போட்ட நிலையில் அந்த மொபைல் போன் உடைந்து செயலிழந்து விட்டதால் அவர் தனது வீட்டுக்கு கூட தகவல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற ரவீந்திரன் நாயரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் வந்து விசாரித்த போது யாருக்கும் எந்த வித தகவலும் தெரியவில்லை. இதனை அடுத்து மூன்றாம் நாள் காலையில் லிப்ட்டை பழுது பார்க்க என்ஜினியர்கள் வந்த போது தான் லிப்டில் மயக்கத்தில் ரவீந்திரன் நாயர் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ரவீந்திரன் நாயர் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.